பொய்யான செய்திகளை எதிர்க்கும் மாநாட்டைக் கூட்ட டிஏபி தயார், அதில் கலந்துகொள்ள எதிரணி தயாரா? -கிட் சியாங்

பொய்யான செய்திகளையும் வெறுப்புப் பேச்சுகளையும் எதிர்க்கும் மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு டிஏபி ஆயத்தமாக உள்ளது என்று கூறிய அதன் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் லிம் கிட் சியாங், எதிர்க்கட்சிகள் உளப்பூர்வமான ஆர்வத்துடன் அதில் கலந்துகொள்ளத் தயாரா என்றும் சவால் விடுத்தார்.

முன்பு டிஏபி எதிர்க்கட்சியாக இருந்தபோது, இனங்களுக்கிடையேயும் சமயங்களுக்கிடையேயும் சச்சரவை உண்டுபண்ணும் பேச்சுகளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்ததை லிம் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இன்றைய எதிரணியும் பொய்யான செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் எதிர்ப்பதில் நாட்டுப்பற்றுடன் ஒன்றுபட்டு நிற்க தயாராக இருக்கிறதா என்றவர் வினவினார்.

“இனங்களுக்கிடையில் சிண்டுமுடித்துவிடுவதையும் சமயங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பொய்ச் செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் எதிர்க்கும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள எதிர்க்கட்சிகள் தயாரா, அவை தயார் என்றால் அம் மாநாட்டை ஏற்பாடு செய்ய டிஏபி தயாராக உள்ளது”, என்றாரவர்.

அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வேற்றுமையை வளர்க்கும் நோக்கத்துடன் பொய்யான செய்திகளைப் பரப்புவதும் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது என்று லிம் சாடினார். மலேசிய தினத்தில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தால் அன்றுகூட அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

அதற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் மலேசிய தினத்தில் ஆற்றிய உரையே சான்று என்றாரவர்.

“டிஏபி மலாய்க்காரருக்கு எதிரி, இஸ்லாத்துக்கு எதிரி என்று கூறிய ஹாடி, டிஏபி சரவாக்கிலும் மலேசியாவிலும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துவதையே விரும்புவதாகவும் கூறினார்”, என்றார்.

அது தவறு என்று குறிப்பிட்ட லிம், டிஏபி பல்லினங்களையும் பல கலாச்சாரங்களையும் பல சமயங்களையும் கொண்ட கட்சியாக மேம்பட்டிருப்பதை மறந்து பேசுகிறார் ஹாடி என்று சாடினார்.