அண்மையில், ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ விசாரணையைச் சிலாங்கூர் காவல்துறையினர் கையாண்டது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், அதன் விசாரணைகளை புக்கிட் அமான் ஏற்று நடத்த வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள், அச்சம்பவத்தின் அதிகாரப்பூர்வப் போலிஸ் அறிக்கைக்குச் சவால் விடுத்துள்ளதை அடுத்து, சிலாங்கூர் காவல்துறை மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என நம்புவதாகத் தெரிவித்தார்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் நூர் அசாம் ஜமாலுட்டின், கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, மூன்று கொள்ளையர்களைக் கொலை செய்வதற்கு முன்னர் தனது படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் வாகனத்தில் துப்பாக்கிகள், பாராங்கத்திகள் மற்றும் முகமூடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், போலிஸ் கூறும் ‘வழக்கமான பதில்’ இதுவெனக் கூறிய அருட்செல்வன், புக்கிட் அமான் உண்மையை வெளிகொணர வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
“இந்தக் கட்டத்தில், புக்கிட் அமான் இந்த வழக்கை சிலாங்கூர் காவல்துறையிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றுவது மிகவும் முக்கியம். ஏனென்றால், மாநிலக் காவல்துறைத் தலைவரின் அறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது.
“அவர், விரைந்து ஒரு போலிஸ் அறிக்கையை வெளியிட்டார், ஆனால் அது வழக்கின் ஆதாரங்களுடன் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை […],” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“சுயேட்சை போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) இருந்தால், நமது வேலை எளிதாகும், ஆனால் இப்போதைக்கு, வழக்கு விசாரணை நடுநிலையாக நடக்க வேண்டுமானால், நாம் புக்கிட் அமானைதான் நம்ப வேண்டியுள்ளது […],” என அவர் மேலும் சொன்னார்.
துப்பாக்கிச் சூட்டில், மூவர் கொல்லப்பட்டனர் – எஸ் மகேந்திரன், 23, ஜி தவசீலன், 31, இலங்கை நாட்டுக்காரரான வி ஜனார்த்தனன், 40, மற்றும் ஜனார்த்தனனின் மனைவி ஜி மோகனாம்பாள் (தவசீலனின் அக்காள்) சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளார்.
இரவு உணவுக்காக செர்டாங் சென்ற அவர்கள் நால்வரும், ரவாங் பத்து அராங்கில் கடத்தப்பட்டதாகவும், காவல்துறையினரால் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்களது குடும்பத்தார் கூறியுள்ளனர்.
நிகழ்வின் இரண்டு பதிவுகள்
காவல்துறையினர் தவச்செல்வன் மற்றும் மகேந்திரன் இருவரையும் குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள் என வகைபடுத்தியுள்ளனர். தவச்செல்வன் முன்னதாக சிறைவாசம் அனுபவித்தவர் என்றும் அவர் மீது 23 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மகேந்திரன், செந்துலில் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் அவர்கள் கூறினர்.
2016-ல், ஜனார்த்தனன் செந்துல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார், ஆனால் அவர் நாட்டுக்குள் நுழைந்ததற்கான எந்தப் பதிவுகளும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜனார்த்தனனின் உறவினர் ஒருவர், அவர் இங்கிலாந்தின் நிரந்தரவாசி என்றும், 2016-ம் ஆண்டு முழுவதும், போர்ட்ஸ்மவுத்தில் மனைவி மோகனம்பால் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் ஜனார்த்தனன் வசித்து வந்ததார் என்றும் கூறியுள்ளார்.
ஜனார்த்தனனும் அவரது குடும்பத்தினரும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி, இலண்டனில் இருந்து புறப்பட்டு, மறுநாள் கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்ததைக் காட்டும் விமான விவரங்கள் மற்றும் துணிப்பைகளுக்கான குறிச்சொற்களையும் அவர்கள் காட்டியுள்ளனர். செப்டம்பர் 23-ம் தேதி, அவர்கள் இலண்டன் திரும்புவதற்காக வைத்திருந்த விமான டிக்கெட்டும் அதில் இருந்தது.
சிலாங்கூர் போலிசார் ஜனார்த்தனனின் குடிநுழைவு பதிவுகளைச் சேதப்படுத்தி உள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர்களின் வழக்கறிஞர்கள், பதிவை நேரமைக்க போலிஸ் வாகனத்தின் டாஷ்போர்டு கேமரா காட்சிகளைக் கோரினர்.
வீடியோவை ஆராயுங்கள்
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற போலிஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோரின் அறிக்கையை அருட்செல்வன் வரவேற்றார்.
இருப்பினும், தவச்செல்வன் மற்றும் மோகனம்பாலின் தந்தை என்று கூறப்படும் ஒருவர் இடம்பெற்றுள்ள புதிய வீடியோ பதிவொன்றில் உள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வேண்டுமென புக்கிட் அமானை அவர் கேட்டுக்கொண்டார்.
“அந்த வீடியோவின் உள்ளடக்கம் மற்றும் பிற தகவல்களையும் போலிசார் உடனடியாக விசாரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சுடப்பட்டு இறப்பதற்கு முன்னதாக, அவர்கள் நால்வரும் தாக்கப்பட்டுள்ளதாக அவ்வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் அவர்களது பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அந்த நபர் கோரியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து விபரம் அறிய, மலேசியாகினி சிலாங்கூர் போலீசாரையும் புக்கிட் அமானையும் தொடர்பு கொண்டுள்ளது.