உங்கள் கருத்து: ஆட்சியில் உள்ளவர்களே பிரிவினையைத் தடுக்க வேண்டும்

மலேசியத் தினத்தில் மகாதிர்: சிலர் நம்மைப் பிரிக்க விரும்புகிறார்கள், அதற்கு இடமளிக்காதீர்கள்

ஜோகூர்வாக்காளன்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்களே, உங்கள் கருத்தே பெரும்பாலான குடிமக்களின் கருத்துமாகும். பல்லினங்களையும் பல சமயங்களையும் சேர்ந்த மலேசிய மக்களை ஒன்றிணைப்பதே நாட்டின் தலையாய பணியாகும் என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால், நீங்கள் இப்போது பல்வேறு இனங்களையும் பிரித்து வைத்துள்ள சர்ச்சைக்குரிய விவகாரங்களை ஆதரிப்பதை விடுத்து ஒற்றுமை மேலோங்க பாடுபட வேண்டும் என்பதே மக்களின் விருபப்மாகும்.

மக்களில் பெரும்பாலோர் அம்னோ-பாஸ் கூட்டணி முன்வைத்துள்ள இனவாதத்தையும் சமயத் தீவிரவாதத்தையும் புறந்தள்ளத் தயாராக உள்ளனர்.

பிராங்கி: எங்களைப் பிரித்து வைத்திருப்போரை நிராகரிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொள்வது போதாது. நாட்டின் உயர்த் தலைவரான நீங்கள்தான் வெறுப்பூட்டுவோரைக் கண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.

சொந்த லாபத்துக்காக மக்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள் மாற மாட்டார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியை நீங்களும் சட்டமும்தான் செய்ய வேண்டும்.

அப்பணியையும் உங்கள் கட்சியில் உங்கள் அமைச்சரவையில் உள்ள சுயநலமிக்க அரசியல்வாதிகளிடமிருந்து தொடங்குங்கள்.

பெயரிலி1540780680: ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்று எப்போதும் மக்களிடமே பொறுப்பைத் தள்ளிவிடுவதை நிறுத்துங்கள்.

பிரிவினையை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு.

அதிகாரிகள், குறிப்பாக போலீசார், இனம், சமயம் பாராமல் சட்டப்படி தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

அவர்கள் மக்களின் சேவகர்கள். அரசாங்கத்துக்கோ அரசியல் கட்சிகளுக்கோ சேவை செய்பவர்கள் அல்ல.

சண்முகம் வி.கே.சுப்பராயன்: இப்போதுள்ள இன, சமயப் பிரிவினைகளுக்கு, முன்பு உங்களது 22-ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்டதே நீங்கள்தானே. இந்தக் குளறுபடிகளைத் தீர்க்க 2018 மே மாதம் தொடங்கி உருப்படியாக எதாவது செய்தீர்களா என்றால் ஒன்றுமே இல்லை.

அந்நிய நாடு ஒன்றின் சட்டத்திலிருந்து தப்பி ஓடிவந்த, வெறுப்பூட்டும் பேச்சுகளுக்குப் பேர்பெற்ற ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவு இருக்கும் துணிச்சலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பிரதிநிதிகளுக்கு எதிராக போலீசில் புகார் செய்கிறார்.

போலீசும் அவருக்கு எதிராக பேசியதாகக் கூறப்படுவோருக்கு எதிராக விசாரணையைத் தொடங்குகிறது. நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமால், நாடு முழுவதும் சென்று கேட்பவர்கள் எதை விரும்புவார்களோ அதைப் பேசி வருகிறீர்கள். வெட்கக் கேடு.

மனசாட்சி: மகாதிர் அவர்களே, நாங்கள் எதைக் கேட்க விருப்பப்படுகிறோமோ அதைப் பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை.

பணச் சலவை நடவடிக்கைகளுக்காக தேடப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அவர் கக்குவது எல்லாம் விஷம்.

இந்த மனிதரை நம் வீட்டைவிட்டு விரட்டுங்கள். நம் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

நியாயவான்: நான்காவது பிரதமராக இருந்தபோது என்ன சொன்னாரோ அதைத்தான் இப்போதும் சொல்கிறார்.

நல்ல வேளை நீண்ட காலம் இருக்கப் போவதில்லை என்று நம்புவோம். 2020 மே-யுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அவரது பிரதமர் பதவியும் முடிவுக்கு வரும்.

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்கை உடனே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புங்கள்.

கோட்சா: ஆம், ஜாகிரை நாடு கடத்துங்கள். மக்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பார்கள். உலகின் மற்ற பெரிய சமயங்களை மதிக்காத ஒருவருக்கு நம் நாட்டில் இடமில்லை.