முன்னாள் எம்ஏசிசி தலைவர் மரணம்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அஹமட் சைட் ஹம்டான்,67, நேற்றிரவு அவரின் மகள் வீட்டில் காலமானார்.

அவரது உடல் இன்று ஸுஹூர் தொழுகைக்குப் பின்னர் கோட்டா டமன்சாரா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என எம்ஏசிசி துணை ஆணையர் ஷம்சுன் பஹாரின் முகம்மட் ஜமில் கூறினார்.

“கடந்த ஆறு மாதங்களில் அவருக்குப் பல முறை தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) இருதயப் பிரச்னைக்காகவும் வாத நோய்க்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது”, என்றாரவர்

“கடந்த வாரம் அவர் வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்தனர். அவர் ராவாங்கில் உள்ள மகள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அஹமட் சைட் 2007 மே 14-இலிருந்து 2009 டிசம்பர் 31வரை எம்ஏசிசி தலைவராக இருந்தார் என்று அவர் சொன்னார்.