கிட் சியாங்: மலேசியாவைக் காக்க 94, 78, 72 எல்லாம் போதாது; இளைஞர் சக்தி தேவை

லிம் கிட் சியாங் சரவாக் இளைஞர்களுக்கான சிறப்புச் செய்தியில், மலேசியாவைக் காக்க தொண்ணூறு வயதான ஒருவரும் 70வயதைத் தாண்டிய இருவரும் பாடுபடுவது மட்டும் போதாது என்று கூறினார்.

94 என்றவர் குறிப்பிட்டது பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை. 72 பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம். 78 தன்னை.

மலேசியாவைக் காக்க இளைஞர்களின் ஆற்றலும் இலட்சியவாதமும் தேவை என்றாரவர்.

எனவே, சரவாக்கில் குறிப்பாக 16க்கும் 25வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடுத்த 12-இலிருந்து 20 மாதங்களுக்குள் நடைபெறவுள்ள 12வது மாநிலத் தேர்தலில் முன்னோடிகளாக இருந்து முக்கிய பங்காற்றிட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

சரவாக் தேர்தல் அடுத்த ஆண்டில் அல்லது 2021-இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே, அண்மையில் வாக்களிக்கும் வயது 21-இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்படப்போகும் முதலாவது தேர்தலாக அமையக்கூடும்.

தன் கருத்துக்கு வலுச்சேர்க்க இந்தோனேசியாவின் முதலாவது அதிபர் சுகர்னோ, பத்து இளைஞர்கள் கிடைத்தால் உலகையே ஆட்டி வைப்பேன், என்று கூறியதை கிட் சியாங் நினைவுகூர்ந்தார்.

“சரவாக் இளைஞர்கள் மலேசியாவை அசைத்துக் காட்டுவார்களா?”, என்றவர் வினவினார்.