பாயான் பாரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலையில் ஊழியர் ஒருவரை போலீஸ் சுட்டுக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியது.
அப்படி ஒரு சம்பவம் இதற்குமுன் அம்மாநிலத்தில் நிகழ்ந்ததில்லை என்று எம்டியுசி பினாங்கு கிளைச் செயலாளர் கே. வீரையா ஓர் அறிக்கையில் கூறினார்.
“அங்கு நிகழ்ந்தது என்னவென்பது முழுமையாக தெரியவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியரின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியாதா என்பதுதான் எங்களின் வருத்தம்”, என்றாரவர்.
அந்நபரைச் சுட்டுக் கொல்லாமல் நிராயுதபாணியாக்கிப் பிடித்திருக்க முடியாதா என்பதை எம்டியுசி அறிந்து கொள்ள விரும்புகிறது என்றாரவர்.
நேற்று ஒரு தொழிற்சாலையில் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்ட வெறி பிடித்த மனிதர் ஒருவரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
அத்தொழிற்சாலையின் ஊழியரான அந்நபர் ஒரு பாராங் கத்தியால் தொழிற்சாலையின் பெண் மேலாளர் ஒருவரையும் ஒரு பாதுகாவலரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாலை மணி 5.15க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் தலையில் வெட்டப்பட்ட மேலாளர் உயிரிழந்தார்.
வெறிபிடித்துத் தாக்கிய நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு வாரமாக அவர் வேலைக்கு வ்ரவில்லை என்றும் பினாங்கு தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.அன்பழகன் கூறினார்.
இம்மாத இறுதியில் பணியிலிருந்து விலகிக் கொள்ள அவர் கடிதமும் கொடுத்திருந்தார்.
“சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்த போலீசார் சரணடையுமாறு அந்நபரிடம் கூறினார்கள். ஆனால், அவர் பாராங்கினால் அதிகாரிகளைத் தாக்கியிருக்கிறார். எனவே, போலீசார் தற்காப்புக்காகச் சுட வேண்டியதாயிற்று”, என்று அன்பழகன் கூறினார்.