வங்கிகளில் முகப்பாளர்கள் மற்றும் பண வைப்பு இயந்திரச் (சிடிஎம்) சேவைகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ள உள்ளூர் வங்கிகளை ஒழுங்குபடுத்த வேண்டியப் பொறுப்பு பேங்க் நெகாராவுக்கு உண்டு. எனவே, அது இந்த விஷயத்தில் விரைந்து தலையிட்டு, உள்ளூர் வங்கிகளின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) பேங்க் நெகாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வணிக வங்கிகளின் பேராசை, இணையச் சேவைகளைப் பயன்படுத்த, மக்களைக் கட்டாயப்படுத்துவதாக பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இது பலருக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோர், குறைந்தக் கல்வி உடையோர், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என, பலருக்குச் சுமையாக இருக்கும்.
“இந்தக் கூடுதல் கட்டணங்களுக்குப் பலியாகப் போவது, வசதிபடைத்தவர்கள் அல்ல, மாறாக, வசதியற்ற பாமர மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்,” என்றார் அவர்.
இந்த நடவடிக்கை வேலை வாய்ப்புகளைக் குறைக்கும், வேலையின்மை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இதனால் பயனடையப் போவது வங்கிப் பங்குதாரர்கள் மற்றும் வங்கியில் அதிக வருமானம் பெறும் ஊழியர்களே. வங்கி முகப்பிடத்தில் பணிபுரிபவர்கள் (கணக்காளர்கள்) வேலை இழக்க நேரிடும். இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பேரழிவைத் தரும்.
“தற்போது, பல வங்கித் தொழிலாளர்கள், தானியக்க பணிகள் மற்றும் வங்கி இணைப்புகள் காரணமாக வேலை இழப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்,” என்றார் அவர்.
வங்கிகள் பணத்தைச் சேமிக்க விரும்பினால், பங்குதாரர்களின் ஈவுத்தொகையைக் குறைக்கலாம் அல்லது வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைக்கலாம் என்றும் அருட்செல்வன் ஆலோசனை வழங்கினார்.
“2019-ம் ஆண்டில், அதிக ஊதியம் பெறும் நமது நாட்டின் முதல் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளில் (சி.இ.ஓ), 5 பேர் வங்கிகளின் சி.இ.ஓ.-ஆக உள்ளனர். இதில் பப்ளிக் பேங்கின் சி.இ.ஓ. ஆண்டுக்கு RM 27 மில்லியன், ஹோங் லியோங் பேங்கின் சி.இ.ஓ. ஆண்டுக்கு RM 12 மில்லியன் என ஊதியம் பெறுகிறார்கள்.
“அதே நேரத்தில் அரசாங்க இணை நிறுவனமான (ஜி.எல்.சி) மே பேங்க் பெர்ஹாட்’டின் சி.இ.ஓ., ஆண்டுக்கு RM 8.7 மில்லியன் சம்பளம் மற்றும் பிற வெகுமதிகளைச் சம்பாதிக்கிறார். சிஐஎம்பி வங்கியின் சி.இ.ஓ. ஆண்டுக்கு RM 9.89 மில்லியன் சம்பளமும் உதவித்தொகையும் பெறுகிறார்.
“இந்தக் கூடுதல் சேவைக் கட்டணங்களைச் சிஐஎம்பி மற்றும் பப்ளிக் பேங்க் இரண்டும் ஏற்கனவே வசூலிக்கும் வேளையில், மேய் பேங்க் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் சொன்னார்.
நியாயமாக, பணக்காரர்களின் வருமானம் மக்களுக்கு உதவப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், வங்கிகள் இந்தக் கூடுதல் கட்டணங்களை விதித்து, அதன் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையையும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வருமானத்தையும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில், குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதோடு, பொது மக்களிடமும் அதிகக் கட்டணததை அவை வசூலிப்பது நியாயமானதல்ல என அருட்செல்வன் கூறினார்.
மலேசியத் தொழிலாளர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாக பலமுறை கூறியுள்ள பேங்க் நெகாரா, அதிகரித்து வரும் உள்ளூர் வங்கிக் கட்டணங்கள் மலேசியர்களுக்குச் சுமையளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதன் கடமையை முறையாகச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அருட்செல்வன், பேங்க் நெகாராவுக்கு வங்கி சேவைக் கட்டணங்களுக்கான நிபந்தனையைப் பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது என்றார்.
பேங்க் நெகாராவின் 2018-ம் ஆண்டு அறிக்கையின் படி, மலேசியத் தொழிலாளர்கள் உற்பத்தித்திறனை விட குறைந்த ஊதியத்தை ஈட்டுகிறார்கள் என்ற தகவலை அருட்செல்வன் மேற்கோளிட்டார்.
“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், குறிப்பாக நிதியமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சர் பணக்கார வங்கி நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா அல்லது குறைந்த ஊதியம் பெற்று, அதிக வாழ்க்கைச் செலவினங்களால் சிரமப்படும் மலேசியர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா எனத் தெளிவுபடுத்த வேண்டும்,” என்றார் அவர்.