உறுதியான காரணம் ஏதுமின்றி, ஒருவரை மாதத்தில் 6 முறை – அண்மையில் குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (போக்கா) உட்பட – கைது செய்த காவல்துறையின் நடவடிக்கை குறித்து, மனித உரிமைகள் அமைப்பான, சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) கேள்வி எழுப்பியுள்ளது.
லாரி திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில் எஸ் கிருஷ்ணன், 48, என்பவரை அவரது வீட்டில் போலீசார் கைது செய்ததாக சுவாராம் சட்ட நிபுணர் சாஷி தேவன் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர், அம்பாங் மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணன், கட்டுமானப் பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 379-ன் கீழ், மீண்டும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
காரைத் திருடிய சந்தேகத்தின் பேரில், கிருஷ்ணன் சுபாங் ஜெயாவில் உள்ள யு.எஸ்.ஜே. காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், ஆனால் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றம், போலீசாரின் தடுத்து வைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்ததாகவும் அவர் மேலும் சொன்னார்.
இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, வேறொரு காவல்நிலையத்தில் போலிஸ் கிருஸ்ணனை மீண்டும் கைது செய்ததாக சுவாராம் நிர்வாக இயக்குநர், சிவன் துரைசாமி தெரிவித்தார்.
முன்னதாக, கிருஷ்ணனின் தடுப்புக்காவல் விண்ணப்பத்தை, அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் நிராகரித்ததாக தேவன் கூறினார்.
சமீபத்தில், செப்டம்பர் 19-ம் தேதி, ஷா ஆலம் நீதிமன்றம், கிருஷ்ணனை அக்டோபர் 9-ம் தேதி வரை, 21 நாட்கள் போக்கா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதித்தது, ஆனால், அவர் எந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார் என்று குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய நபர் மீது குற்றம் சுமத்தவும், நீதிமன்றத்தில் நிறுத்தவும் போதுமான ஆதாரங்களைப் போலிசார் வழங்கத் தவறிவிட்டனர், இது சி.பி.சி.-ஐ (குற்றவியல் நடைமுறை குறியீடு) போலிசார் துஷ்பிரயோகம் செய்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது
“அவர்கள் சி.பி.சி.-ஐ தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சந்தேக நபரை போக்கா’வின் கீழ் தடுத்து வைத்துள்ளனர், ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அவர் மீது குற்றம் சுமத்தலாம்,” என்று அவர், மனித உரிமைகள் ஆணைய (சுஹாகாம்) அலுவலகத்தில், கிருஷ்ணனின் குடும்பத்தாரைச் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிருஷ்ணனின் குடும்பத்தினர் பல முறை போலீசை அழைத்தபோதும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை என கிருஷ்ணனின் குடும்ப வழக்கறிஞர் கணேஷ் ராவ் சொன்னார்.
கிருஷ்ணனின் நிலையைத் தெரிந்துகொள்ள, அவரது குடும்பத்தார் பலமுறை செலாயாங் காவல் நிலையம் சென்று வந்துள்ளதாகக் கூறிய அவர், கிருஷ்ணன் கொடுமைக்குள்ளாகி உள்ளதாகவும் நெஞ்சு வலியால் அவதிபடுவதாகவும் தெரிவித்தார்.
“மருத்துவர் கொடுத்த மருந்துகளை, போலிசார் கிருஷ்ணனிடம் கொடுக்கவில்லை.”
கிருஷ்ணனின் மனைவி, விஜயா தேவி, தன் கணவரைச் சந்திக்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரியின் விளக்கம் தெளிவாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-ஃபிரி மலேசியா டுடே