வரி விதிப்பு முறையில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்புச் செய்கிறார்கள், அதனால் வரி இழப்பு ஏற்படுகிறது. அதைச் சரிக்கட்ட மலேசியா வரிச் சீரமைப்புகளைச் செய்வது அவசியம் என்கிறார் பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமே சுந்தரம்.
இப்போதைய வரிவிதிப்பு முறையில் காணப்படும் பலவீனங்கள் தனியாரும் நிறுவனங்களும் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்பளிக்கின்றனவாம்.
“சில ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆடம்பர கார்களை வைத்துள்ளவர்களில் பாதிப்பேர் வருமான வரிகூட செலுத்துவதில்லை என்பது தெரிய வந்தது”, என்றாரவர்.
அதேபோல், பெரிய அனைத்துலக நிறுவனங்கள் அரசாங்கங்கள் அளிக்கும் பல்வேறு சலுகைகளையும் வரிவிலக்கு வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பலன் காணும் நோக்கில் மட்டுமே வெளிநாடுகளில் தங்கள் தொழிலகங்களை அமைக்கின்றன.
“அவை நம் நாடுகளில் நிறைய பணம் ஈட்டுகின்றன. ஆனால், எப்படியோ நாம் அவற்றுக்கு நிறைய வரி விலக்குகளை அளித்து விடுகிறோம்.
“அவை கணக்குகளைத் திறமையாகக் கையாண்டு வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றன, அப்படியே செலுத்தினாலும் குறைவான வரிகளையே செலுத்துகின்றன”, என்றாரவர்.
மலேசியாவில் 1950கள் தொடங்கி இன்றுவரை வரிச் சலுகைகளையும் வரி விலக்குகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன.
இவையெல்லாம் வரிவிதிப்பு முறை மேலும் பயனுற விளங்க வேண்டுமானால் அதில் சீரமைப்புச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன என்று ஜோமோ சொன்னார்.