அண்மையில் பினாங்கு, பாயான் லெப்பாஸில் போலீசார் வெறிபிடித்த ஒருவரைச் சுட்டுக்கொன்றது பற்றிக் கருத்துரைத்த அம்னோ தலைவர் ஒருவர், அம்மனிதர் வெறிபிடித்த நிலைக்கு ஆளானார் என்றால் அதற்குச் சிலர் அவரது சமயத்தைச் சிறுமைப்படுத்தியதுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீச வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்திருந்தும் அவர் இவ்வாறு பேசியுள்ளார்..
நேற்றிரவு ஒரு செராமாவில் உரையாற்றிய புத்ரி அம்னோ உதவித் தலைவர் நூருல் அமால் முகம்மட் ஃபவுசி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், சிலர் நபிகள் நாயகத்தைச் சிறுமைப்படுத்திப் பேசியதால்தான் அப்படிப்பட்ட வெறி கொண்ட நிலைக்கு ஆளானார் என்றார்.
“நேற்று ஒரு தியாகியை அடக்கம் செய்தோம். ஷேக் முகம்மட் கைரில் இரண்டு காஃபிர்கள் நபிகள் நாயகத்தைச் சிறுமைப்படுத்திப் பேசியதால் வெறிபிடித்த நிலைக்கு ஆளாகி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்”, என்று கிளந்தான், குபாங் கிரியானில் கூறினார்.
பாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு செராமாவில் நூருல் அமால் அவ்வாறு கூறினார்.
அதற்குச் சில மணி நேரத்துக்கு முன்புதான் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர், அச்சம்பவம் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
“ஊகங்களால் சமுதாயத்தில் பதற்றத்தை உண்டுபண்ண வேண்டாம்”, என்று ஹமிட் வலியுறுத்தினார்.
போலீஸ் விசாரணைகளைல் , சுட்டுக் கொல்லப்பட்ட நபர் காணொளிகளில் மத்திய கிழக்கில் முஸ்லிம்கள் படும் இன்னல்களைப் பார்த்துப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, நபிகள் நாயகத்தைச் சிறுமைப்படுத்திப் பேசியதுதான் இச்சம்பவத்துக்குக் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலைப் பரப்பிவரும் மூவரைத் தேடி வருவதாக போலீசார் கூறினர்.
திங்கள்கிழமை, வெறிபிடித்த நிலையில் தொழிற்சாலை மேற்பார்வையாளர் ஒருவரைப் பாராங் கத்தியால் தாக்கிக் கொன்றதுடன் 53வயது பாதுகாவலர் ஒருவரையும் தாக்கிக் காயம் விளைவித்த ஷேக் முகம்மட் கைரிலை போலீசார் சுட்டுக்கொன்றனர்.