போலீஸ்: அரசியல்வாதிகளையும் முஸ்லிம்-அல்லாதாரையும் தாக்குவது தடுத்துவைக்கப்பட்ட மலேசியனின் திட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16பேரில் ஒருவனான ஒரு மலேசியன், தலைவர்களையும் முஸ்லிம்-அல்லாதாரையும் தாக்கத் திட்டமிட்டிருந்தானாம்.

அந்த அரசியல்வாதிகளும் முஸ்லிம்-அல்லாதாரும் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் சிறுமைப்படுத்துகிறார்கள் என்பது அவனுடய நினைப்பு என்று புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவு-பயங்கரவாதம் (இ8) தலைமை உதவி இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை கூறினார்.

இதற்கு எதிர்வினை ஆற்றிய வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் நாட்டில் வேற்றுமைக்கு வித்திடும் அரசியல்வாதிகளைச் சாடினார்.

“வெறுப்புக்கும் பிரிவினைக்குத் தூபம் போடும் பொறுப்பற்ற இனவாத அரசியல்வாதிகள் இதைப் படிக்க வேண்டும்”, என்று இன்று பிற்பகல் டிவிட் செய்திருந்தார்.

இதனிடையே, பெர்னாமா தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 12 பேர் இந்தோனேசியர்கள், மூவர் மலேசியர், ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறியது.