பாடாங் மேஹா தோட்டப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை, தோட்ட மக்கள் கெடா எம்பியிடம் கோரிக்கை

பாடாங் மேஹா தோட்டத்தில், நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடையை அகற்றக் கோரி, அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், இன்று காலை, கெடா மந்திரி பெசார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று, பாடாங் மேஹா தோட்டத்தின் உரிமையாளரான ‘விண்டேஜ் டெவெலப்பர் சென்.பெர்.’ நிறுவனம் (எம்.பி.ஃப். ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் துணை நிறுவனம்), கெடா மாநில நீர் நிறுவனமான ‘சரிக்காட் ஆயேர் டாருல் அமான்’ (சாடா) மற்றும் போலிசாரின் உதவியுடன் அத்தோட்டத்தின் நீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

இது ஒரு கொடூரமான செயல், தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கான ஒரு மோசமான முயற்சி இது என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்திய செயலவை உறுப்பினரான இரா கார்த்திகேசு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“பாடாங் மேஹா தோட்டக் குடியிருப்பாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை. தோட்டத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு ஆதரவாக, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியப் பின்னர், கடந்த ஏப்ரல் மாதத்தில், முதல்முறையாக குடிநீர் தடை செய்யப்பட்டது, இது நில உரிமையாளரின் பழிவாங்கும் படலம் போல தெரிகிறது,” என்றார் கார்த்தி.

பாடாங் மேஹா தோட்டத் தொழிலாளர் வரலாறு

கெடா, பாடாங் செராயில் அமைந்திருக்கும், பாடாங் மேஹா தோட்ட முன்னாள் தொழிலாளர்கள், 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

கடந்த மார்ச் 12, 1995-ல், பாடாங் மேஹா தோட்டம் விற்கப்பட்டதைத் தொடர்ந்து, 212 தொழிலாளர்கள் எந்த இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாமல், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர். அவர்களில் 207 பேர், தங்களுக்கு வீடு மற்றும் இழப்பீட்டுத் தொகை வேண்டுமெனக் கோரி, எம்.பி.ஃப். கன்ட்ரி ஹோம்ஸ் & ரிசோட் சென்.பெர். கீழ் இயங்கும் ‘தி ஈஸ்ட் ஆசியடிக் கம்பெனி (ம) (அதன்பிறகு அல்மன்டா டெவலப்மன்ட் சென்.பெர். அறியப்பட்டது) நிறுவனத்தின் மீது, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இவர்களின் நீதிமன்ற வழக்கு, இறுதியில் வெற்றி பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு, இழப்பீட்டுத் தொகையோடு, மேற்படி வீட்டிற்கு ரிம 22,500 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், அந்நிறுவனம் திவாலாகிவிட்டது எனக்கூறி, இன்றுவரை அவர்களுக்கு எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படவில்லை. பலமுறை இதுகுறித்து திவால் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆனால், அத்தோட்டத்தின் பெரும்பகுதி நிலம், மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. தோட்ட மக்களில் ஒரு பகுதியினர், அலமண்டா நிறுவனத்தை நீதிமன்றத்தில் நிற்க வைத்து, முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்ற வழி காண முயற்சிக்கின்றனர்.

அலமண்டா நிறுவனம், இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை வழங்க முன்வந்தால், நீதிமன்ற வழக்கை மீட்டுக்கொள்ள தயாராக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அலமண்டா நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு முன்வர தயாராக இல்லை.

பி.எஸ்.எம். கடந்த 24 வருடங்களாக இத்தோட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகிறது. இழப்பீடு கோரும் 207 தொழிலாளர்களில் 70 பேருக்கும் மேல் இன்றில்லை, இறந்துவிட்டனர். இவர்களில் அதிகமானோர் வயதானவர்கள், இன்னும் 20 வருடங்கள் இவர்களால் காத்திருக்க முடியாது என்று கார்த்திகேசு தெரிவித்தார்.

கடந்த அக்டோபர்  29, 2017-ல், பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க ஒரு காலகெடு கேட்டு, அத்தோட்ட வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு வழக்குப் பதிவு

அதனை அடுத்து, மற்றொரு நீதிமன்ற வழக்கு 2016-ல் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால், 2018-ம் ஆண்டில் ஏமாற்றமளிக்கும் வகையில் அதன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது என பி.எஸ்.எம். வீடமைப்புப் பிரிவின் தலைவருமான கார்த்திகேசு சொன்னார்.

“அவர்களுக்கு, 1995-ல் கூறப்பட்டதுபோல் இழப்பீடாக மாற்று வீடுகள் வழங்கப்படாமல், இழப்பீட்டுத் தொகை மட்டுமே வழங்கப்பட்டது.

“இதனையடுத்து, இந்த வழக்கு புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏப்ரல் 4, 2019-ல், 1995-ம் ஆண்டில், அசல் முதலாளி வழங்கிய RM33.3 மில்லியனை, முன்னாள் ஊழியருக்குத் திருப்பித் தருமாறு எம்.பி.ஃப்.-க்கு உத்தரவிடப்பட்டது.

“24 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.பி.ஃப். இந்த முன்னாள் ஊழியருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வைத்துகொண்டு, அதை அவர்களிடம் ஒப்படைக்க விரும்பவில்லை. அதுமட்டுமின்றி, தொழிலாளர்கள் அனுபவிக்க வேண்டிய நன்மைகளை எம்.பி.ஃப். நிறுவனம் இதுவரை “சாப்பிட்டு வந்துள்ளது” என்பதனை இந்த நீதிமன்ற தீர்ப்பு நிரூபிக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த முன்னாள் தொழிலாளர்கள் மாற்று வீடுகள் பெற போதுமானதாக இல்லை என்று கார்த்திகேசு வருத்தம் தெரிவித்தார்.

‘சாடா’ ஏன் நீர் விநியோகத்தை நிறுத்த வேண்டும்?

தற்போது, ​​இந்தப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத நிலையில், எம்.பி.ஃப். மற்றும் அதன் துணை நிறுவனமான விண்டேஜ் இரண்டும், இந்த வழக்கை பெடரல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சாடா-வின் உதவியுடன் தண்ணீரைத் துண்டித்து, அத்தொழிலாளர்களை வெளியேற்ற எம்.பி.ஃப். மற்றும் விண்டேஜ் ஏன் நிர்பந்திக்க வேண்டும் என்று கார்த்திகேசு கேள்வி எழுப்பியுள்ளார்.

கெடா மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம், தொழிலாளர்களை ஒடுக்கி அவர்களுக்குத் தீங்கிழைக்கும் நில உரிமையாளர்களுடன் சேர்ந்து ஏன் சதி செய்கிறது என்று பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தொழிலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாடாங் மேஹா தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், மாநில மந்திரி பெசாரும் சாடாவின் தலைவருமான முக்ரிஸ் மகாதீரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் கார்த்திகேசு தெரிவித்தார். அவை :-

  1. நீர் விநியோகத் தடையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்;
  2. தோட்ட நில இலாகாவின் அறிக்கையைக் கண்ணுற்று, தோட்ட நிலம் விற்கப்படும்போது அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகளைத் தோட்ட உரிமையாளர் பின்பற்வில்லை என்பதனை கண்டறிய வேண்டும்;
  3. விண்டேஜ் நிறுவனத்தை, முத்தரப்பு கூட்டத்திற்கு அழைத்து, முன்னாள் ஊழியர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு, 25 ஏக்கர் நிலத்தை வழங்க அழைப்பு விடுக்க வேண்டும்;
  4. நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டுப் பணத்தைப் பயன்படுத்தி, கெடா மாநில அரசு, அத்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

24 ஆண்டுகளாக நீடித்துவரும் இப்பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படும்வரை ஓயப்போவதில்லை என்று அத்தொழிலாளர்கள் உறுதியாகக் கூறினர்.