சீ பீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலுக்கு வெளியில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீ அணைப்புப் படை வீரர்களில் ஒருவரான அடிப், இரண்டு மூன்று பேர் தாக்கியதால் மரணமுற்றார் என்று மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகம்மட் இன்று தீர்ப்பளித்தார்.
அதே வேளை கலவரம் நடந்த வேளையில் போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதும் அடிப் மரணத்துக்கு ஒரு காரணம் என்றாரவர்.
“பிடிஆர்எம்-மும் எஃப்ஆர்யு-வும் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதும் ஒரு காரணம் என்று கூறிக்கொள்கிறேன்”, என்றாரவர்.
பல நூறு போலீஸ்காரர்கள் அங்கு இருந்தாலும் கலவரம் நடப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர கலவரத்தை ஒடுக்க முனையவில்லை.
சாட்சிகளில் ஒருவர் சம்பவம் நடந்த வேளையில் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியதையும் ரோஃபியா சுட்டிக்காட்டினார்.