அதிக பட்சம் மூன்றாண்டுகள், அதன்பின் பதவி விலகுவேன் – மகாதிர்

டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவது உறுதி என்கிறார்.

2018 மே மாதப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததை அடுத்து 94-வயது மகாதிர் இரண்டாவது தடவையாக நாட்டின் பிரதமரானார்.

“அப்போது நான் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இன்னொருவருக்கு வழிவிட்டுப் பதவியிலிருந்து விலகுவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். எனவே, அதிக பட்சம் மூன்றாண்டுகள் பதவியில் இருப்பேன்”, என்றவர் நியு யோர்க் நகரில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கூறினார்.

அந்த மூன்றாண்டுகளில் சில காரியங்களைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது என்றாரவர்.

மகாதிர் ஐக்கிய நாடுகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியு யோர்க் சென்றிருக்கிறார்.

பிரதமராக இருப்பது கடுமையான வேலை என்று கூறிய மகாதிர், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதாகக் கூறினார்.

“(பிரதமராக) நீண்டகாலம் இருக்கப் போவதில்லை என்பதால் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது”, என்று அந்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் கூறினார்.