பினாங்கு பாயான் லெப்பாஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளைப் பரப்பி வந்த மூவரைப் போலீஸ் கைது செய்தது.
இருவர் கெடாவிலும் ஒருவர் பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் சிஐடி தடயவியல் பிரிவு துணை இயக்குனர் முகம்மட் ஸுரைடி இப்ராகிம் கூறினார்.
மூவரும் செப்டம்பர் 26-இல் கைது செய்யப்பட்டு கோலாலும்பூர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகம் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை பினாங்கு , பாயான் லெப்பாஸ் தொழிற்சாலை ஒன்றில் வெறிபிடித்த ஒரு ஆடவர் அத்தொழிற்சாலையின் மேற்பார்வையாளரையும் பாதுகாவலரையும் பாராங் கத்தியால் தாக்கியதை அடுத்து போலீசார் அவனைச் சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் நபிகள் நாயகத்தைச் சிறுமைப்படுத்திப் பேசியதால்தான் வெறிபிடித்த நிலைக்கு ஆளானான் என்று அம்மூவரும் சமூக வலைத்தளங்களில் இனவாத ரீதியில் கருத்துகளைப் பரப்பி வந்தார்களாம்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட கருத்துகளை அப்படியே ஒரு செராமாவில் எடுத்துரைத்த புத்ரி அம்னோ உதவித் தலைவர் நூருல் அமால் முகம்மட் பவுசிமீதும் போலீஸ் விசாரணை மேற்கொள்ளும் என ஸுரைடி தெரிவித்தார்.
“அச்சம்பவம் தொடர்பில் கூறப்படும் எல்லாவற்றையும், புத்ரி அம்னோ தலைவர் பேச்சு உள்பட, போலீஸ் விசாரிக்கும். ஆனால், அவர் பேசியது தொடர்பில் இதுவரை போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை”, என்றாரவர்.