மகாதிர் மலாய்க் காங்கிரசில் கலந்துகொள்வது பதற்றநிலையை மேலும் மோசமாக்கும்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த மாதம் மலாய் கண்ணியம் காக்கும் காங்கிரசில் கலந்துகொள்வது  நாட்டில் பதற்ற நிலையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரிக்கிறார் மசீச உதவித் தலைவர் டி லியான் கெர்.

“பாஸும் அம்னோவும் அனைவரையும் அரவணைத்துச் செல்வது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது” பக்கத்தான் ஹரப்பான் இனவாதத்தை வைத்து விளையாட முற்படுவது ஏன் என்று டி வினவினார்.

“பாஸும் அம்னோவும் நாட்டின் மற்ற இனங்களின் நிலையையும் உரிமைகளையும் கெடுக்காத வகையில் முவாவாகாட் நேசனல்( தேசிய ஒற்றுமை) பற்றிப் பேசி வரும்போது ஹரப்பான் அரசாங்கமும் பெர்சத்துத் தலைவர்களும் ‘மலாய்க் கண்ணியம்’ என்ற பெயரில் மலாய்க்காரரிடையே வெறுப்புணர்வை வளர்த்து வருவது வேடிக்கையாகும்”, என்றாரவர்.

பிரதமர் அக்காங்கிரசில் கலந்துகொண்டு ‘மலாய்க் கண்ணியம்’ பற்றிப் பேச உத்தேசித்திருப்பதில் ‘மலாய் மேலாதிக்க’ வாடை அடிக்கிறது. மலாய் மேலாதிக்கத்தை டிஏபி நெடுகிலும் கண்டனம் செய்து வந்திருப்பதை டி சுட்டிக்காட்டினார்.

இப்போது மட்டும் அது கண்ணையும் காதையும் மூடிக் கொண்டிருப்பதாக அவர் சாடினார்.

மகாதிருக்கு அவர் மலாய்த் தலைவர் மட்டுமல்ல, எல்லா மலேசியர்களுக்கும் பிரதமர் என்பதை நினைவூட்ட வேண்டும் என்றும் டி வலியுறுத்தினார்.

மலாய்க் கண்ணியம் காக்கும் காங்கிரஸ் அடுத்த மாதம் புக்கிட் ஜலிலில் நடக்கும் எனத் தெரிகிறது.