தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் ‘முதலில் முஸ்லிம்களுக்கே வாக்களிப்பீர்’ இயக்கத்தைத் தொடக்கியுள்ள கெராக்கான் பெங்குண்டி செடார்(ஜிபிஎஸ்) என்னும் மலாய் என்ஜிஓ-வை மசீச இளைஞர் தலைவர் நிகோல் வொங் சாடினார்.
அவ்வியக்கம் மலேசியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்றவர் குறிப்பிட்டதாக இணைய செய்தித்தளம் த மலேசியன் இன்சைட் கூறிற்று.
“மசீசவும் பிஎன்னும் எப்போதும் மிதவாதத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. யார் எங்கள் இலட்சியத்தைப் பகிர்ந்து கொண்டிருப்பவர்களோ அவர்களை வரவேற்போம். வேட்பாளரின் இனத்தை அல்லது சமயத்தைப் பார்ப்பதில்லை”, என்றாரவர்.
மசீச சமூக இயக்கப் பிரிவுத் தலைவர் இங் கியான் நாம் அவ்வியக்கம் தோல்வியுறுவது உறுதி என்றார்.
“எல்லாவற்றையும் இன, சமயக் கண்கொண்டு நோக்குவதில் பொருளில்லை. வேட்பாளர் தொகுதிக்குப் பணியாற்றக் கூடியவரா என்பதைத்தான் பார்க்க வேண்டும்”, என்றாரவர்.
ஜிபிஎஸ் இயக்குனர் அஸ்ஸிடிக் பெளசான் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தஞ்சோங் பியாய் தொகுதியில் 57 விழுக்காட்டு வாக்காளர்கள் மலாய்- முஸ்லிம்கள் என்பதால்
“அத்தொகுதியின் வேட்பாளர் மலாய்- முஸ்லிம்களின் குரலாக விளங்கக்கூடிய ஒரு மலாய்-முஸ்லிமாக இருப்பதே பொருத்தமானதாகும்”, எனக் கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகம்மட் ஃபாரிட் முகம்மட் ரஃபிக் காலமானதை அடுத்து தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.