மலாய்க்காரர் கண்ணியம் காக்க அரசாங்கப் பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்துவது ஏன்? காலிட் நோர்டின் கேள்வி

மலாய்க்காரர் கண்ணியம் காக்கும் காங்கிரசை ஏற்பாடு செய்வதில் பெர்சத்து கட்சியினர் மலாயாப் பல்கலைக்கழகத்தையும் வேறு சில அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்னோ உதவித் தலைவர் காலி நோர்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் அறிவாற்றலை வளர்ப்பதிலும் மேம்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மலாய்க்காரர் கண்ணியம் பற்றிக் கவலைப்படுவது எப்போதிருந்து?

“மலேசியாவில் உள்ள அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன், அரசியலையும் மலாய்க் கண்ணியத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுடையது மலாய் அரசியல் கட்சிகளுடையது…அது உங்கள் வேலை அல்ல”, என்று கூறிப் பலகலைக்கழங்கள் நடுநிலை களங்களாக இருக்க வேண்டும் என்றார்.

மலாய்க் கண்ணியம்காக்கும் மாநாடு நடத்தப்படுமானால் மற்ற இனங்களும் இனம்சார்ந்த மாநாடுகளை நடத்தச் சொல்லிக் கோரிக்கை விடுக்கலாம் என்று காலிட் கூறினார்.

அம்னோ, பாஸ் ஒத்துழைப்பு ஒப்பந்தம் அண்மையில் செய்து செய்து கொள்ளப்பட்டதை அடுத்து இந்த காங்கிரஸ் ஏற்பாடு செய்யப்படுவது பற்றியும் முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் கேள்வி எழுப்பினார்.

“அது தற்செயலானதா அல்லது அம்னோ-பாஸ் தேசிய ஒத்துழைப்பு இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் நடத்தப்படுகிறதா?

“போட்டியாகத்தான் என்றால் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் எதற்கு பெர்சத்துவே ஏற்பாடு செய்திருக்கலாமே?”, என்றவர் வினவினார்.

அடுத்த மாதம் கோலாலும்பூர், புக்கிட் ஜலிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த மலாய் காங்கிர்சைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தொடக்கி வைக்கிறார்.