புத்ரி அம்னோ தலைவரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

பினாங்கு பாயான் லெப்பாசில் வெறிபிடித்த ஆடவன் இருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த புத்ரி அம்னோ தலைவர் ஒருவரிடம் போலீஸ் இன்று விசாரணை நடத்தியது.

விசாரணைக்காக புத்ரி அம்னோ உதவித் தலைவர் நூருல் அமால் முகம்மட் பவுசி இன்று காலை மணி 10க்கு புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டதாக புக்கிட் அமான் சிஐடி டி5(வழக்கு தொடுத்தல் மற்றும் சட்டப் பிரிவு) தலைமை உதவி இயக்குனர் மியோர் பாரிடாலாட்ரேஷ் கூறினார்.

“ஆமோக் விவகாரம் குறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

“பினாங்கில் செய்யப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் அவர்மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

கடந்த புதன்கிழமை கிளந்தான், குபாங் கிரியானில் ஒரு செராமாவில் உரையாற்றிய நூருல் அமால், நபிகள் நாயகத்தை இழித்துரைத்ததால் வெறிகொண்ட ஓர் ஆடவன் இருவரைத் தாக்கிவிட்டு போலீஸ்காரர்களைத் தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

“நேற்றிரவு ஒரு சமயத் தியாகியை அடக்கம் செய்தோம். இரண்டு காஃபிர்கள் நபிகள் நாயகத்தைச் சிறுமைப்படுத்தியதால் வெறிகொண்ட ஷேக் முகம்மட் கைனி போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார்”, என்றவர் கூறினாராம்.

ஏற்கனவே இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் ஹமிட் படோர், பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம், பரப்புவோருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார்.