நெகரா கூ -வுக்கு சரவாக்கியர் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?- எஸ்4எஸ்

சரவாக் சரவாக்கியருக்கே(எஸ்4எஸ்) என்று கூறிக்கொள்ளும் ஓர் அமைப்பு, கடந்த வாரம் நிதி திரட்டும் ஒரு நிகழ்வில் நாட்டுப்பண்ணான நெகாரா கூ இசைக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்காதது ஏன் என்று ஒரு காணொளியில் விளக்கமளித்துள்ளது. சரவாக் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில்தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்களாம்.

அக்காணொளியை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்த எஸ்4எஸ் உறுப்பினர் ஷாவ் துங் லியோங் -இவர் அலெக்ஸ் லியோங் என்றும் அழைக்கப்படுகிறார்- “மலாயா” சரவாக்கியர்களிடம் “மிகவும் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பதாக”க் கூறினார்.

அதனால்தான் நெகரா கூ இசைக்கப்பட்டபோது நாங்கள் எழுந்து நிற்கவில்லை”, என்றவர் ஃப்ரி மலேசியா டுடே-இடம் கூறினார்.

சரவாக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் விசயத்தில் மலேசியா அமைக்கப்பட்ட 1963 தொடங்கி அம்மாநிலம் சுரண்டப்பட்டு வருவதாக லியோங் கூறினார்.

சாபாவுக்கும் சரவாக்குக்கும் எண்ணெய் உரிமப் பணத்தை 20 விழுக்காடு உயர்த்துவதாக பக்கத்தான் ஹரப்பான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நிலையில் அரசாங்கம் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அப்புறம் ஏன் நாங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்?”, என்று லியோங் வினவினார்.

நெகரா கூ மலாயாவின் நாட்டு பண்ணாக 1957-இல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

“சரவாக் 1963-இல்தான் மலேசியாவில் இணைந்தது. மலேசியக் கூட்டரசுக்குப் புதிய நாட்டுப்பண்ணை உருவாக்க வேண்டும். எதற்காக நெகாரா கூவையே பாடிக் கொண்டிருக்கிறார்கள்?”, என்றும் வினவினார்.

இதற்கு எதிர்வினை ஆற்றிய புக்கிட் அமான் சிஐடி தலைமை உதவி இயக்குனர் மியோர் ஃபாரிடலாத்ராஷ் வாஹிட், நாட்டுப் பண்ணை அவமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

1968 நாட்டுப் பண் சட்டத்தின்கீழ் அது ஒரு குற்றமாகும் என்றவர் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“போலீசார் கண்டால் கைது செய்வார்கள்”, என்றாரவர். ஆனால், நாட்டுப் பண் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் இதுவரை எந்தவொரு புகாரையும் பெற வில்லை என்றும் அவர் சொன்னார்.