‘வருமான உத்தரவாதம் வேண்டும்!’ ஃபூட்பண்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாத, புதியக் கட்டணத் திட்ட அறிமுகத்தை எதிர்த்து, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஃபூட்பண்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஊடக அறிக்கையின்படி, கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே, செப்டம்பர் 30, 2019 முதல் 3 நாட்கள், ஃபுட்பண்டா ரைடர்ஸ் இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளனர்.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் ஃபுட்பாண்டா உணவு விநியோக நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30, 2019 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதியக் கட்டணத் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில், ஜொகூரில் உள்ள உணவு விநியோகஸ்தர்கள், ஏற்கனவே ஜொகூர் பாருவில் உள்ள ஃபுட்பாண்டா அலுவலகங்களில் போராட்டத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில், ஃபுட்பாண்டா ரைட்டர்ஸ் ஒரு மணி நேரத்திற்கு RM4 அடிப்படை சம்பளமும் ஒவ்வொரு உணவு விநியோகத்திற்கும் கூடுதல் தொகையும் (டிப்ஸ்) பெறுகிறார்கள். ஆர்டர்களுக்கான ‘டிப்ஸ்’ அனுப்புநரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு RM3 முதல் RM5 வரையில் இருக்கும். புதியக் கட்டணத் திட்டம், மணிநேர அடிப்படை சம்பளத்தை நீக்கிவிட்டு, ஆர்டர்களுக்கான கட்டணத்தை RM4.50-லிருந்து RM7 வரை அதிகரிக்கிறது.

ஃபுட்பண்டா தொழிலாளர்களின் ஊதியம் நியாயமானதா?

ஏற்கனவே குறைந்த வருமானம் பெறும் இவர்களுக்கு, இப்புதியக் கட்டணத் திட்டம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஃபுட்பாண்டா தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேவேளை, ‘திருத்தப்பட்ட இப்புதியத் திட்டம், அவர்கள் பெறும் ஆர்டர்களின் அடிப்படையில் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பளிக்கும். எனவே, விநியோக வருமானத்தை அது பாதிக்காது’ என்ற அடிப்படையில், ஃபுட்பாண்டா நிறுவனங்கள் இத்திட்டத்தை ஆதரிக்கின்றன.

குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே இருக்கும் ஃபுட்பண்டா தொழிலாளர்களை இது அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. காரணம், ஒருநாள் முழுக்க எந்தவொரு ஆர்டரும் வராமல் இருக்கும் தருணங்களும் இவர்களுக்கு உண்டு. எனவே, இத்திட்டம் இவர்களைப் போன்றோருக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

‘வாரத்தில் 60 மணிநேர வேலை செய்த பின்னர், RM 100 போனஸ் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்’ என்று, ஃபுட்பாண்டா நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், வாரத்தில் 6 நாள்கள், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்வதன் மூலம் மட்டுமே ஃபுட்பாண்டா ரைடர்ஸ்-ஆல் இந்தப் போனஸ்-ஐப் பெற முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்குப் பிறகு கூடுதல் நேரச் சம்பளம் (OT) பெற முடியும் என்றால், ஃபுட்பாண்டா தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே கூடுதல் ஊதியம் பெற முடியும். இது நியாயமான ஒன்றா?

இரவு மணி 11 முதல் காலை 9 மணி வரையிலான ஆர்டர்களுக்குக் கூடுதலாக RM1, போதுமான ஒன்றல்ல, காரணம் அந்நேரத்தில் அதிகமான ஆர்டர்கள் வராது, அதுமட்டுமின்றி, அது நள்ளிரவு நேரம், தொழிலாளர்கள் தூங்கி, ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘கிக்’ பொருளாதாரத் துறை பிரச்சனைகள்

ஃபுட்பண்டாவின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ளது. அதன் கிளை நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஹொங் கோங், தைவான், இந்தியா, பாக்கிஸ்தான் எனப் பல நாடுகளில் செயல்படுகின்றன.

மலேசியாவில், இந்த ஃபுட்பண்டா தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை, ‘கிக்’ பொருளாதாரத் துறையினால் உருவாகிவரும் பிரச்சனைகளை வெளிபடுத்தியுள்ளது. (கிக் பொருளாதாரம் – தொழிலாளர்களும் வர்த்தகர்களும் தங்கள் வணிக நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் திட்டம். ஆன்லைனில், தற்காலிகமாக அல்லது சுதந்திரமாக வேலை செய்யும் முறை.)

‘கிக்’ பொருளாதாரம் என்பது, இலாபத்தைப் பன்மடங்காக உயர்த்த, முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ‘புத்தாக்க’ முயற்சியாகும். ஆன்லைன் தளங்களின் உரிமையாளர்களான நிதி முதலாளிகள், இவ்வகையான ‘நெகிழ்வான’ மற்றும் ‘தற்காலிக’ வேலைகளை உருவாக்குவதன் மூலம் பன்மடங்கு நன்மைகளை அனுபவிக்கிறார்கள். ‘கிக்’ பொருளாதாரத்தின் கீழ் முதலாளி-பணியாளர் உறவு மங்கலாகிவிட்டது, தொழிலாளர்கள் ‘ஒப்பந்தக்காரர்கள்’ அல்லது ஃப்ரிலான்ஸ்சர் (அடிமைப்படாத, பகுதிநேர வேலை) என்ற முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். கேட்பதற்கு இலகுவாக இருந்தாலும், பாரம்பரியப் பொருளாதாரத் துறையில், முழுநேர ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் போல் அல்லாமல், இவர்களின் வேலை பாதுகாப்பற்றதாகவே உள்ளது.

கிக் பொருளாதாரத் துறை, முதலாளித்துவப் பொருளாதாரச் சகாப்தத்தில் தவிர்க்க முடியாத போக்காக மாறி வருகிறது. ‘கிராப் இ-ஹெயிலிங்’ சேவைகள் மற்றும் ஃபுட்பாண்டா ஆன்லைன் உணவு விநியோகம் போன்ற ஆன்லைன் சேவை தளங்களை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களின் வளர்ச்சி, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை உத்தரவாதங்களை அழிப்பதோடு, முதலாளிகள் பெருத்த ஆதாயங்களைப் பெறவும் வழிவகுக்கின்றன.

‘ஃப்ரிலான்ஸ்சர்’ தொழிலாளர்கள் அதிகரிப்பு

உலக வங்கியின் கூற்றுப்படி, மலேசியத் தொழிலாளர்களில் சுமார் 26 விழுக்காட்டினர், இப்போது ஃப்ரிலான்ஸ்சர் முறையில் வேலை செய்கின்றனர், இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தொழில் நெகிழ்வான வேலை நேரத்தை வழங்கினாலும், வருமானம் மற்றும் தொழில் நிரந்தர பாதுகாப்பு இதில் இல்லை. எனவே, அதிகமான தொழிலாளர்கள் கணிக்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கி, ‘பிரிகரியட்’ (நிரந்த வேலை பாதுகாப்பு மற்றும் காப்பீடு இல்லாத தொழிலாளர் வகுப்பினர்) ஆகிறார்கள்.

‘கிக்’ பொருளாதாரத் துறையில், முதலாளிகள் தொழிலாளர்களின் உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பு பொறுப்புகளைக் கைக்கழுவி விடுவதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியையும் பலவீனப்படுத்துகின்றார்கள். ஏனெனில், இந்த ‘ஒப்பந்த’ அல்லது ‘தற்காலிக’ வேலை முறை, தொழிலாளர் சங்கங்களில் இவர்கள் இயங்குவதைக் கடினமாக்குகிறது. இருப்பினும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் சக்தியைக் காட்ட முடியும்.

ஆகவே, இந்த ஃபுட்பாண்டா உணவு விநியோகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், தொழிலாளர் வேலை-வாழ்க்கை பாதுகாப்பின்மையை உருவாக்கும், ஒரு வேலை முறையின் மூலம் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தக்கூடாது எனும் செய்தியை வெளியுலகிற்குப் பரைசாற்றுகிறது.

  • சோசலிஸ்ட்.நெட்