அம்னோ எம்பி நோ ஒமார், அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற அமர்வில் தீ அணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணம் தொடர்பில் முன்பு தடுத்து வைக்கப்பட்ட நான்கு சந்தேகப் பேர்வழிகள் குறித்து மீண்டும் கேள்வி கேட்கப் போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த அமர்வில் அதே கேள்வியை எழுப்பியதாகவும் அதற்குச் சரியான மறுமொழி கிடைக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
“கடந்த அமர்வில் உள்துறை அமைச்சரிடம் (முகைதின் யாசினிடம்) கேட்டேன், அவர்கள் இன்னமும் நாட்டில்தான் இருக்கிறார்களா என்று. அதற்கு எழுத்துப்பூர்வமான பதில் கொடுக்கப்பட்டது.
“பதிலில் எனக்கு திருப்தி இல்லை. அப்போதே சொன்னேன் வழக்கில் குற்றச்செயல் சம்பந்தப்பட்டிருப்பது நிரூபிக்கப்படும் என்று. நான் சொன்னது உண்மையாயிற்று.
“இப்போதைய கேள்வி என்னவென்றால், சந்தேகத்துக்குரிய அந்நால்வரையும் போலீஸ் மீண்டும் விசாரணைக்கு அழைக்குமா, அவர்கள் இன்னமும் மலேசியாவில்தான் உள்ளனரா?”, என நோ ஒமார் வினவியதாக அம்னோ ஆன்லைன் கூறிற்று.
ஜூலை 9-இல் நோ கேட்ட கேள்விக்கு விடை அளித்த உள்துறை அமைச்சு, அந்நான்கு ஆடவரும் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தது.
விசாரணையில் அவர்களுக்கு அடிப் மரணத்துடன் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததால் போலீஸ் பிணையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்
“அந்நால்வர்மீதும் விசாரணை முடிந்து விட்டதால் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அவர்களை மரணத்துடன் தொடர்புப் படுத்தும் புதிய ஆதாரங்கள் கிடைக்குமானால் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கும்”, என்றும் அமைச்சு கூறியது.