மூத்த அரசியல்வாதி சைட் உசேனைக் கண்டிக்கும் தகுதி சைட் சாதிக்குக்கு இல்லை- இராமசாமி காட்டம்

பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி,   பிகேஆர் நிறுவனர் சைட் உசேன் அலியைக் கண்டித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைக் கடுமையாக சாடினார்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குத் துதிபாடும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தனக்கும் பிரச்னை எதுவுமில்லை என்று கூறிய அந்த டிஏபி தலைவர் , சைட் உசேன் சாதாரண மனிதர் அல்ல என்றார்.

“பிகேஆரின் நிறுவன உறுப்பினரும் முன்னாள் பார்டி ரக்யாட் மலேசியா தலைவரும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியலில் பல்லாண்டுகள் சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவரை குறைசொல்ல இவர் யார்?

“தம் அரசியல்கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். அதற்காக சைட் உசேன் 1970களில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்”, என்று இராமசாமி ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று சைட் சாதிக், பிரதமர் பதவியை மாற்றிக் கொடுக்கும் விவகாரம் தொடர்பில் சைட் உசேன் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கண்டித்திருந்தார். மகாதிர் பிரதமர் பதவி மாற்றிக் கொடுப்பதற்கு ஒரு தேதியைக் குறிப்பிடாமல் இருப்பதற்காக சைட் உசேன் மகாதிரைக் குறை கூறினார். அத்துடன் மகாதிரின் வெளிநாட்டுப் பயணங்கள் பணத்தை விரயமடிக்கும் செயல் என்றும் அவர் சாடியிருந்தார்.

சைட் உசேன், பிகேஆரின் நிறுவனர் என்பதால் பிரதமர் பதவியை மாற்றி விடுவது குறித்து கேள்வி கேட்கும் உரிமை அவருக்கு உண்டு என்றார் இராமசாமி.

“மகாதிர் ஒரு இடைக்காலப் பிரதமர். நியாயமான காலத்துக்குத்தான் அவர் பிரதமராக இருக்க முடியும். முழுத் தவணைக்கும் இருக்க முடியாது.

“எவ்வளவு காலத்துக்கு அவர் பிரதமராக இருப்பது என்பது பக்கத்தான் உடான்பாட்டில் குறிப்பிடப்படவில்லைதான். ஆனால், ஈராண்டுகளுக்குப் பின்னர் அன்வாருக்கு இடம்விட்டு மகாதிர் விலகிக்கொள்வார் என்பது பக்கத்தானில் எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து.

“எனவே, அது எப்போது என்பதை மகாதிர்தான் தெரிவிக்க வேண்டும். .அதைத் தெரிவிப்பதில் என்ன சிரமம் ?”, என்றவர் வினவினார்.

இதைச் செய்யத் தவறினால் , பதவியை மாற்றிக்கொடுப்பது தொடர்பான உடன்பாட்டைக்கூட நிறைவேற்றாத தலைவர்களா மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கேள்வி எழும் என்றும் இராமசாமி கிறிப்பிட்டார்.