பினாங்கு பள்ளி பிரார்த்தனை விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை

கடந்த வாரம் பினாங்கு மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் ஒரு விருதளிப்பு நிகழ்வில் கிறிஸ்துவ பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் போலீஸ் இதுவரை ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

போலீஸ் அதன் விசாரணைக்கு உதவியாக மேலும் ஒன்பதின்மரை அழைக்கும் எனத் தெரிகிறது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் வாக்குமூலம் பெறப்படும் என கூட்டரசு சிஐடி (வழக்குத் தொடுத்த, சட்டப் பிரிவு) தலைமை உதவி இயக்குனர் மியோர் ஃபரிடாலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

“இதுவரை அப்பள்ளிக்கு எதிராக 10 புகார்கள் செய்யப்பட்டுள்ளன”, என்றவர் இன்று புக்கிட் அமானில் கூறினார்.

பள்ளி நிகழ்வில் பிரார்த்தனைக்கு இடமளித்த பள்ளி நிர்வாகத்த்துக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி தலைமை இயக்குனர் அமின் செனின் கூறினார்.

முஸ்லிம் அமைப்பு ஒன்று முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்ப அப்பள்ளி முயல்வதாக போலீசில் புகார் செய்ததை அடுத்து அந்நிகழ்வு பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.