பாதி வேலைதானே முடிந்துள்ளது, எப்படி பதவி மாற்றத்துக்கு நாள் குறிப்பது?- மகாதிர்

டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பது தொடர்பாக பல மாதங்களாக பல்வகை ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்று அவரிடமே இக்கேள்வி முன்வைக்கப்பட்டது. பிரதமர் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருப்பதாக வலியுறுத்தினார்.

“நிலவரத்தை ஆராய வேண்டும். வேலை பாதி முடிந்திருந்தாலோ அல்லது செய்யப்படாமல் இருந்தாலோ அப்படியே போட்டுவிட்டு விலகிச் செல்வது ‘சூசா,லா’ (சிரமம்)” , என்றாரவர்.

அன்வாரிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதை மகாதிர் அடிக்கடி கூறி வந்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால், எப்போது என்பதை மட்டும் அவர் குறிப்பிடுவதில்லை.

அன்வாரைப் பொறுத்தவரை மகாதிர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

ஆனால், இப்போது மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் பெருகி வருவதைக் காண முடிகிறது. அன்வாரின் கட்சியில் அவருக்கு எதிரியாக உள்ள பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியும் அதை ஆதரிக்கிறார்.