அடுத்த மாதம் தஞ்சோங் பியாயில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிஎன் மசீச வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர்.
வாக்காளர்கள் மலாய்க்காரர்- அல்லாத எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாகும் என்று லொக்மான் ஆடம் கூறினார்.
57 விழுக்காடு வாக்காளர்கள் மலாய்க்காரர்களாக இருப்பதால் அங்கு வெற்றிபெற அம்னோ அல்லது பாஸ் வேட்பாளரைக் களமிறக்குவதே நல்லது என்ற கருத்து நிலவுகிறது.
“ஆனால், அதற்கு ஆதாரமில்லை. அது உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வழிதான் உண்டு- மசீச வேட்பாளரைக் களமிறக்க வேண்டும்.
“சிலர் கூறுகிறார்கள், மலாய்க்காரர்கள் ஒரு சீனருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று. அது உண்மையாயின், கடந்த பொதுத் தேர்தலில் வீ ஜெக் செங் படுதோல்வி அடைந்திருப்பார்.
“ஆனால், அவர் 524வாக்குகள் வேறுபாட்டில்தான் தோற்றார். அவருக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும்பகுதி இனவாதமற்ற மலாய்க்காரர்களின் வாக்குகள்தான் என்று நான் நம்புகிறேன்”, என்றவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி கூறுகிறது.
தஞ்சோங் பியாய் தொகுதி காலங்காலமாக மசீச போட்டியிட்டு வந்துள்ள ஒரு தொகுதியாகும். ஆனால், அண்மைக்காலமாக அம்னோ அங்கு போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகி வருகின்றன.