தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: வியூகம் அமைக்க பக்கத்தான் நாளை கூடுகிறது

பக்கத்தான் ஹரப்பான் நாளை அதன் கூட்டத்தில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலுக்கு வியூகம் அமைப்பது குறித்து விவாதிக்கும் என பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

அக்கூட்டத்துக்கு அவரே தலைமை ஏற்பார்.

“நாளை இரவு நான் மூவாரில் இருப்பேன். அங்கு மத்திய நிலை தேர்தல் குழுக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்பேன். அதில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்”, என்றார்.

பக்கத்தானைப் பொறுத்தவரை ஒரு தொகுதியை எந்தக் கட்சி வைத்திருந்ததோ அக்கட்சியே இடைத் தேர்தலிலும் போட்டியிடும். அந்த வகையில் தஞ்சோங் பியாயியில் பெர்சத்து போட்டியிடும் என்றார்.

ஆனால், வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கிறது என்பதால் மெதுவாக முடிவு செய்யலாம் என்று முகைதின் கூறினார்.