தெங்கு அட்னான் வழக்கு: ரிம2 மில்லியன் அம்னோ கணக்கில் செலுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை

தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் வழக்கில் ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் ரிம2 மில்லியன் அம்னோ கணக்கில் செலுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை என்று அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சரான தெங்கு அட்னான், அசெட் காயாமாஸ் சென். பெர்ஹாட் இயக்குனர் சாய் கின் கோங்கிடமிருந்து 2016, ஜூன் 14-இல் பெற்றுக்கொண்ட ரிம2 மில்லியனுக்கான காசோலையை அவரே வைத்துக்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அக்காசோலை, தெங்கு அட்னான் பெரும்பகுதி பங்குதாரராகவுள்ள டாட்மன்சூரி ஹொல்டிங்ஸ் சென். பெர்ஹாட் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதிலிருந்து சிறிதளவு பணம்கூட அம்னோ கணக்கில் செலுத்தப்படவில்லை என 23வது சாட்சியான மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி(ஐஓ) அளித்த வாக்கும்மூலத்தை அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜூலியா இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.

இதன்வழி அப்பணம் சுங்கை புசார் மற்றும் பேராக் கோலா கங்சார் இடைத் தேர்தல்களுக்காகக் கொடுக்கப்பட்ட பணம் அல்ல என்பது தெளிவாகிறது என்றாரவர்.

தெங்கு அட்னான்மீது குற்றவியல் சட்டம் 165வது பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுவரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுவடுவதற்கு அச்சட்டம் வகை செய்கிறது.

-பெர்னாமா