கட்சித்தாவல் தப்பல்ல என்ற மகாதிர் கருத்தை ஏற்க மறுக்கிறார் டிஏபி தலைவர்

அரசியல்வாதிகள் நியாயமான காரணத்துக்காகக் கட்சி தாவுவதை ஏற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பது “வருத்தத்துக்குரியது” என்கிறார் டிஏபி தேசிய சட்டப் பிரிவுத் தலைவர் ராம்கர்ப்பால் சிங்.

கட்சித் தாவல் “கொள்கையற்றது” என்பதால் அதை ஊக்குவிக்கக் கூடாது என்றாரவர்.

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனிப்பட்டவர்கள் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, கட்சிக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றாரவர்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு அவரது கட்சியின் கொள்கைகள் ஏமாற்றமளித்து அவர் கட்சியில் தொடர்ந்திருக்க விருப்பமில்லை என்ற நிலை வருமானால் அவர் கட்சியிலிருந்து விலகி இடைத் தேர்தலில் தன் நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பதுதான் முறையாகும்”, என்றார்.

14வது பொதுத் தேர்தலுக்குப் பின் நிறைய கட்சித்தாவல் நடந்திருப்பது ஏன் என்றும் புக்கிட் குளுகோர் எம்பி வினவினார்.

“இந்நாட்டில் அரசியல் ஆதாயம் கருதித்தான் கட்சித்தாவல் நடக்கிறது. கட்சியின் கொள்கைகள் ஏமாற்றமளிக்கின்றன என்று கூறுவதெல்லாம் சும்மா” என்றாரவர்.

கட்சித்தாவலைத் தடுக்க சட்டம் கொண்டுவரும் துணிச்சல் ஹரப்பான் அரசாங்கத்துக்கு வேண்டும் என்றும் ராம்கர்ப்பால் வலியுறுத்தினார்.