இரண்டு மாதங்களுக்குமேலாக ஒத்தி வைகக்ப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை மறுபடியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் 2020 பட்ஜெட் முக்கிய இடம் பெறும்.
இவ்வாண்டுக்கான நாடாளுமன்றத்தின் இந்த மூன்றாவது கூட்டம் 36 நாள்களுக்கு நீடிக்கும். இதில் பல புதிய சட்டவரைவுகளும் ஏற்கனவே உள்ள சட்டங்களுக்குத் திருத்தங்களும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 11-இல் நிதி அமைச்சர் லிம் குவான் எங் 2020 பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இந்தக் கூட்டத்தில் 11 குற்றங்களுக்கு கட்டாய மரணத் தண்டனை என்றுள்ள சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளது. அரசாங்கம் மரணத் தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனை விதிப்பதென முடிவு செய்ததை அடுத்து இத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னதாக சட்ட விவகார அமைச்சர் லியு வுய் கியோங், போலீஸ் மீதான புகார்களை விசாரிக்க அமைக்கப்படும் சுயேச்சை ஆணையமான ஐபிசிஎம்சி மீதான சட்டவரைவை இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது கடந்த ஜூலை 18-இல் முதல் வாசிப்புக்குக் கொண்டுவரப்பட்டது.
இக்கூட்டத்தில் பொய்ச் செய்திச் சட்டத்தை நீக்க மீண்டும் முயற்சி செய்யப்படும் என்று லியு ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆகஸ்ட் மாதம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2018 பொய்ச் செய்தி (நீக்க) சட்டவரைவு மேலவையால் நிராகரிக்கப்பட்டது. அந்தச் சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் தாக்கல் செய்யும்.