ஊழல் கண்காணிப்பு அமைப்பான ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா (டிஐ-எம்) அரசாங்க அமைப்புகளில் நிலவும் ஊழல் பற்றித் தகவல் அளிப்போருக்கு ரிம30,000வரை வெகுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்திருப்பதை வரவேற்கிறது.
எம்ஏசிசி கையூட்டையும் ஊழலையும் ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றிபெற தகவலளித்து உதவுமாறு டிஐ-எம் அரசு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டது.
“கையூட்டு வாங்க ஒருவர் இருந்தால் கொடுப்பதற்கும் ஒருவர் இருக்க வேண்டும். கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும். ஆனால், பெரும்பாலும் வாங்குவோர்தான் தண்டிக்கப்படுவதைப் பார்க்கிறோம், கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுவது அரிது”, என டிஐ-மலேசியா தலைவர் முகம்மட் மோகன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“சட்டத்தை அமலாக்கும் எம்ஏசிசி போன்ற ஓர் அமைப்பு ஊழல் செய்வோரை விசாரிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று விரும்புகின்ற அதே வேளை, அவர்கள் தங்கள் பணியைச் செய்வதற்கு தகவல் அளிப்போர் உள்பட எல்லாத் தரப்பினரும் உதவிட வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.
அரசு ஊழியர்கள் மோசடி, நிதி தவறாகப் பயன்படுத்தப்படுதல், விரயமாக்கல், கையூட்டு போன்ற முறைகேடுகளை அம்பலப்படுத்துவதன்வழி தங்களில் பெரும்பாலோர் கைச்சுத்தமானவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள இது நல்ல தருணம் என்று முகம்மட் மோகன் கூறினார்.