தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சுவாமிநாதன் ஆகிய இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்பி லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.
2012 பாதுகாப்புச் சட்டம்(சிறப்பு நடவடிக்கைகள்) அல்லது சோஸ்மாவின்கீழ் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று டிஏபி மூத்த தலைவர் கூறினார்.
நேற்று பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட எழுவரில் குணசேகரனும் சுவாமிநாதனும் அடங்குவர்.
இதனிடையே, அவர்கள் கைது செய்யப்பட்டதை வரவேற்ற பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் அமான் ரசாலி, பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமியையும் கைது செய்ய வேண்டும் என்றார்.