மலாய்க்காரர் நலனுக்காக போராடுவது சரி ஆனால், நாட்டைப் பிளவுபடுத்தியும் இனங்களுக்கிடையில் வேற்றுமையை விதைத்தும்தான் அதைச் சாதிக்க வேண்டும் என்பதல்ல என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“மலாய்க்கார்களிடையே ஹீரோ என்று பெயரெடுப்பது எளிது. எப்படி என்று எனக்குத் தெரியும்.
“ஆனால் பிளவையும் பகைமையையும் உண்டாக்கித்தான் அதைச் சாதிக்க வேண்டும் என்றால் அது (தேசத்) துரோகமாகும்”, என்றவர் கூறியதாக ஃப்ரி மலேசியா டுடே கூறியது.
நேற்று, நாட்டு நிர்மாணம் மற்றும் அமைதிக் கலாச்சாரம் மீதான கருத்தரங்கில் பேசியபோது அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.
தலைவர்களாக உள்ளவர்கள் மலாய்க்காரர்களுக்காக மட்டுமல்லாமல் எல்லா இனங்களிலும் உள்ள வசதிகுறைந்தவர்களுக்காக போராட வேண்டும் என்று அன்வார் கூறினார்.
“இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மலாய்க்காரர்கள். ஆனால், தோட்டப்புறங்களில் உள்ள இந்தியர்களும் நகர்ப்புறங்களில் சில பகுதிகளில் சீனர்களும் வறிய நிலையில் இருந்தால் அவர்களைக் கவனிப்பதும் நம் பொறுப்புத்தான்.
“நம் மனிதாபிமானம் எங்கு போயிற்று?” என்றவர் வினவினார்.
ஒருவரின் மகத்துவம் நீதிக்காகப் போராடும்போதுதான் வெளிப்படும், மற்றவர்களை அச்சுறுத்தும் போதல்ல என்று போர்ட் டிக்சன் எம்பியான அன்வார் கூறினார்.