எல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால், குற்றமற்றவர்கள் கொடுமைப்படுத்தப்படக் கூடாது- சரவணன்

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்த மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் குற்றவாளிகள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சரிதான் ஆனால், நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கக் கூடாது என்றார்.

ஸ்ரீலங்காவில் தனி நாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி-யின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இதர எழுவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து சரவணன் அவ்வாறு கூறினார்.

“இது தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம். குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியதுதான் ஆனால், குற்றம் செய்யாதவர்களைத் தண்டிக்கக்கூடாது”, என்று சரவணன் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

அவ் வெழுவரும் எல்டிடிஇ தொடர்புள்ளவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அக்டோபர் 11-இல் போலீஸ் அவர்களைக் கைது செய்தது. விசாரணைக்கு உதவியாக மேலும் சிலர் கைது செய்யப்படும்  சாத்தியத்தையும்  அது   மறுக்கவில்லை.