வெள்ளிக்கிழமை நடந்த வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றியும் பேசப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் குறிப்பாக டிஏபி-யைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புச் சட்டம்(சோஸ்மா) அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த பக்கத்தான் ஹரப்பான் அதே சோஸ்மாவைப் பயன்படுத்தி அவர்களைக் கைது செய்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தனர் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
“ஆமாம், அது பற்றி விவாதிக்கப்பட்டது உண்மைதான். சில அமைச்சர்கள் அதிருப்தியை வெளியிட்டனர்”, என்று தெரிவித்த அவ்வட்டாரம் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
வேறு சில வட்டாரங்கள், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் உள்துறை அமைச்சர் முகைதின் யாசினும் அவ்விவகாரத்தைப் போலீஸ் விசாரணைக்கே விட்டுவிடுவதாகக் கூறினார்கள் என்று தெரிவித்தன.
“பிரதமரும் உள்துறை அமைச்சரும் விவகாரத்தை போலீஸ் விசாரணைக்கே விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
“முகைதினுக்கு அவர்கள்(சட்டமன்ற உறுப்பினர்கள்) கைது செய்யப்பட்டது தெரியாதாம்”, என்றொரு வட்டாரம் கூறியது.
வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட விருந்த பட்ஜெட் 2020 பற்றி விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்தது.
எனவே அது பற்றி விவாதிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. அடுத்தடுத்த கூட்டங்களில் அது விரிவாக விவாதிக்கப்படும் என்று அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.