பாரிசான் நேசனல் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆகிய இரண்டையும் சாடிய பெட்ரா ஜெயா எம்பி ஃபாதில்லா யூசுப், அவற்றின் பிளவுபடுத்தும் அரசியலால் ஏமாற்றமடைந்துள்ள இளைஞர்கள் ஒரு புதிய இயக்கத்தின் மூலம் எழுச்சி பெற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
முன்னாள் பொதுப் பணி அமைச்சரும் இப்போது அவர் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சி உதவித் தலைவருமான ஃபாதில்லா, ஆத்திரம் கொண்ட மலேசியாவின் இளம் தலைமுறை அரசியலை மாற்றி அமைக்கக் களமிறங்க வேண்டும் என்றார். இனம், சமயம், மொழி ஆகியவற்றைப் பன்னிப் பன்னிப் பேசிவரும் இன்றைய அரசியல்வாதிகள் ஒன்றுபட்ட மலேசியா உருவாகத் தடையாக உள்ளனர் என்றாரவர்.
சமூக வலைத்தளப் பதிவுகளைப் பார்க்கையில் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிபெற்றுள்ள இளம் தலைமுறையினரில் பெரும்பகுதியினர் இன்றைய அரசியல் நிலை மீது எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது என்று ஃபாதில்லா கூறியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி ஒன்று தெரிவித்தது.
நான்கு முறை பாரிசான் நேசனல் கொடியின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஃபாதில்லா. பிஎன்மீது அதிருப்தியுற்ற அவர் தன்னுடைய பிபிபி கட்சியுடன் அதிலிருந்து வெளியேறி காபோங்கான் பார்டி சரவாக்கில் இணைந்தார்.
புதிய கொள்கைகளைச் செயல்படுத்தவும் மக்களின் தேவைகளைக் கவனிக்கவும் தவறிவிட்ட அரசியல் தலைவர்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றாரவர்.