மாணவர்மீது கடும் நடவடிக்கையைத் தவிர்ப்பீர்- கிட் சியாங்

மலாயாப் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்துல் ரகிம் ஹஷிம் பட்டமளிப்பு விழாவின்போது எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் வொங் யான் கெ-மீதான போலீஸ் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டிஏபி எம்பி லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவரைப் பழி வாங்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்கூட மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உண்டு ஆனால், பட்டமளிப்பு விழா மேடை அதற்குரிய இடம் அல்ல என்று கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த திங்கள்கிழமை யுஎம் பட்டமளிப்பு விழாவில் வொங் யான் கெ தனது சான்றிதழைப் பெற்றுக்கொண்டு மேடையிலிருந்து இறங்கும்போது ஒரு பதாதையை உயர்த்திப் பிடித்தார். அதில் “இது மலேசிய நாடு. இனவாதியை விலக்குவீர். விசி பதவி விலக வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் 6-இல் மலாய்த் தன்மான காங்கிரசில் யுஎம் துணை வேந்தர் டாக்டர் அப்துல் ரகிம் ஹஷிம் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வொங் அப்படி நடந்து கொண்டாராம்.