தாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும் வழக்குரைஞரின் முயற்சி தோல்வி

தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசமைப்புப்படி சரியா என்று கேள்வி எழுப்ப அனுமதி கேட்டு வழக்குரைஞர் முகம்மட் கைருல் அசாம் அப்துல் அசீஸ் தாக்கல் செய்த மனுவைப் புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கல்வி தொடர்பில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று மலாயா தலைமை நீதிபதி அஸஹார் முகம்மட் தீர்ப்பளித்தார்.

தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசமைப்புப்படி சரியா என்று வழக்கு தொடுக்கும் இடம் கூட்டரசு நீதிமன்றம் அல்ல என்றாரவர்.

முகம்மட் கைருல் , இவ்வாண்டு அக்டோபர் 23-இல் பதிவு செய்த ஒரு மனுவில் 1996 கல்விச் சட்டத்தின் பிரிவு 17க்கும் 28க்கும் ஒரு திருத்தம் கொண்டுவந்தது அரசமைப்புப்படி செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

முகம்மட் கைருல் அவ்விவகாரம் குறித்து வழக்கு தொடுப்பதாக இருப்பின் உயர் நீதிமன்றத்தில்தான் தொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். கூட்டரசு நீதிமன்றம் அதற்கான இடமல்ல.

கல்வி அமைச்சு தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகளை ஏற்படுத்தியது, மலாய்மொழிதான் தேசிய மொழி என்று கூறும் அரசமைப்பின் பிரிவு 152(1)-க்கு எதிரானது என்பது அவரது வாதம்.

இவ்விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக முகம்மட் கைருலின் வழக்குரைஞர் ஷஹருடின் அலி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.