இந்திய கூட்டுறவுக் கழகங்களின் சாபக்கேடும் – விமோசனமும் – இராகவன் கருப்பையா

இந்நாட்டில் இந்தியர்களுக்கென பல கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. என்.எல்.எஃப்.சி.எஸ். எனப்படும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், நேசா கூட்டுறவுக் கழகம், கே.பி.ஜே. எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் மற்றும் மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் போன்றவை இவற்றுள் முன்னணி வகிக்கின்றன.

அமரர் துன் சம்பந்தன் தோற்றுவித்த என்.எல்.எஃப்.சி.எஸ். மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டு வருவதோடு, அதன் உறுப்பினர்களுக்கு கணக்கிலடங்கா சலுகைகளையும் பயன்களையும் வழங்கி வெற்றிகரமாக பீடு நடை போடுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் தான்ஸ்ரி சி.சுப்பிரமணியம் தொடங்கிய நேசா, முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் சாமிவேலு ஆரம்பித்த  கே.பி.ஜே. மற்றும் சமூகக் கலைமாமணி அமரர் ச.ஆ.அன்பானந்தன் நிறுவிய மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் ஆகியவற்றின் நிலை என்ன?

பொருளாதாரத்தில் நாம் தொடர்ந்து பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறோம் இந்நாட்டில். இந்த சூழ்நிலையில் சில கூட்டுறவுக் கழகங்கள் சேமிப்பு மற்றும் முதலீடு என்ற போர்வையில் நம்மை வசீகரப்படுத்தி நம்மிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் வாங்கிச்சென்று துஷ்பிரயோகம் செய்வதுதான் மிக வேதனையான விசயம்.

நேசாவின் நிலை கடந்த பல மாதங்களாக நீதிமன்றத்தில் சந்தி சிரிக்கிறது.

கே.பி.ஜே. உறுப்பினர்களிடையே புகைச்சல் ஆரம்பித்துவிட்டது – என்னேரத்திலும்  அந்த கூட்டுறவுக் கழகம் நீதிமன்றக் கதவை தட்டும் போல் தெரிகிறது.

இதற்கிடையே பல வருடங்களாக உறங்கிக் கிடந்த மாஜூ ஜெயா தற்போது சற்று உயிர் பெற்று செயல்படத் தொடங்கியுள்ளது.

கடந்த 1977ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற உறுப்பினர்களின் நலனை மையமாக வைத்து இந்த கூட்டுறவுக் கழகத்திற்கு வித்திட்டார் ச.ஆ.அன்பானந்தன். பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த அந்தக் கூட்டுறவுக்கழகம் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் 4 மாடிக் கட்டிடம் ஒன்றையும் தனது சொத்தாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிறகு நிர்வாகக் கோளாரினால் பண நெருக்கடிக்குள்ளான வேளையில் அக்கட்டிடம் விற்கப்பட்டது நம் சமுதாயத்திற்கு மிகவும் வேதனையான ஒரு இழப்பு.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கொஞ்சம் சுறுசறுப்பாக செயல்படத் தொடங்கியுள்ள இதன் நிர்வாகஸ்தர்கள் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து, நீண்டகாலத் திட்டங்களின் பயன்கள் எல்லோரையும் சென்றடைய வகை செய்ய வேண்டும். இல்லையேல் நேசா மற்றும் கே.பி.ஜே. பட்டியலில் மாஜு ஜெயாவும் சேர்ந்துவிடும் அபாயம் உள்ளது.

சுமார் 17 வருடங்களுக்கு முன் இருந்த 20 மில்லியன் ரிங்கிட் கடன் தற்போது அடைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னேற்றப் பாதையில் இப்போது கழகம் செயல்பட்டு வருகிறது என்றும் அதன் தலைவர் இரா.மாசிலாமணி அண்மையில் குறிப்பிட்டிருந்தார் – மகிழ்ச்சியான விஷயம், பாராட்டுக்குறியது.

கழகத்தின் 32 ஆயிரம் உறுப்பினர்களும் பயனடையும் வகையில் இவ்வாண்டு மொத்தம் 6 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அடுத்த ஆண்டு முதல் உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்கப்படவுள்ளதாக அவர் செய்த அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனால் அதன் செயல்பாடுகள் மற்றும் ஆண்டுக் கூட்டங்கள் முதலியவை தொடர்பான அறிவிப்புகளை எல்லா உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெரிவிப்பதில்லை.

என்ன காரணம்?

32 ஆயிரம் உறுப்பினர்களில் பெரும்பாலோர் வீடு மாற்றலாகிவிட்டதால் அவர்களுடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்ற மாசிலாமணியின் கூற்றை எப்படி ஜீரணிப்பது என்றுத் தெரியவில்லை.

நிர்வாகக் கவனக் குறைவினால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்தத் தவற்றை ஒப்புக்கொள்வதில் தப்பில்லை. சகட்டு மேனிக்கும் எல்லா உறுப்பினர்களையும் குறை சொல்லக்கூடாது.

அவர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த கழகம் எவ்வாரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் தெரியவில்லை.

அவர்களும் எல்லா உரிமைகளையும் பெற்ற பங்குதாரர்கள்தான் என்பதையும் கழகம் உணரவேண்டும். இல்லையெனில் இன்னமும் மாஜு ஜெயா ஒரு மண் குதிரைதான்.

‘எக்டிவ்'(active) உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கழகத்தின் திட்டங்கள் குறித்து நாங்கள் அறிவிப்போம் என்கிறார் அதன் செயலாளர் கே.ரத்தினசிங்கம்.

‘எக்டிவ்’ என்றால் தமிழில் ‘சுறுசுறுப்பு’ என்று பொருள்படும். ஆக சுறுசுறுப்பான உறுப்பினர்கள் மற்றும் சுறுசுறுப்பில்லாத உறுப்பினர்கள் என எப்படி இவர்கள் வகைபடுத்துகிறார்கள் என்றுத் தெரியவில்லை.

மான் கொம்பு வந்தவுடன் மாட்டுக் கொம்பை மறந்துவிடக்கூடாது.

எல்லா அங்கத்தினர்களுக்கும் அறிவித்தால் தபால் செலவு அதிகமாகும் என்று அவர் வாதிட்டது கேலிக் கூத்தாகத்தான் உள்ளது.

ரத்தினசிங்கம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருகிறார் என்றுத் தெரியவில்லை. ஒரு லட்சம் உறுப்பினர்களாக இருந்தாலும் 5 காசு கூட செலவில்லாமல் ஒரே ‘கிளிக்’ செய்து மின் அஞ்சல் அனுப்பிவிடலாமே! அதுவும் இல்லையென்றால் மாதம் 100 ரிங்கிட்டுக்கும் குறைவான செலவில் கைபேசி வழி அனைவருக்கும் ‘வட்ஸப்’ செய்யலாம் அல்லது நேரடியாகவே அழைத்து பேசலாமே!

ஆக கழகத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற சாக்குப்போக்கையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு பாரபட்சமில்லாமல் எல்லா அங்கத்தினர்களும் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளை செய்து திட்டங்களை செயல்படுத்துவதில் மாஜூ ஜெயா கவனம் செலுத்த வேண்டும்.

இல்லையென்றால் பழையபடி அது கூனிக் குறுகி சுருங்கி உறங்கி விடும் நிலை ஏற்படக்கூடும்.