உங்கள் கருத்து: ஹரப்பான் அதன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமா என்பதை இடைத் தேர்தல் முடிவு செய்யும்

பெயரிலி 770241447347646: தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சார காலம் ஒன்றிரண்டு நாள்களில் முடிவுக்கு வந்து விடும் என்பதால் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவைத் திரட்டுவதற்கு வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும். இன்றைய நிலையில், அங்கு நிலைமை அதற்குச் சாதகமாக இல்லை.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரின் கொள்கைகளின் வழியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பல்டி அடித்ததன் மூலமாகவும் ஒரு சிலர் மற்ற இனங்களைச் சிறுமைப்படுத்திப் பேசியபோது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாலும் பலத்த சேதங்களை விளைவித்து விட்டார்.

ஹரப்பான் அரசுமேல் வைக்கப்பட்ட நம்பிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறதா என்பதை தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நிரூபிக்கும். மலாய் ஆதரவைப் பெறுவதற்கே முன்னுரிமை அளிக்கும் பெர்சத்து அதன் முயற்சியில் வெற்றி பெற்றதா என்பது இடைத் தேர்தலில் தெரியவரும்.

அதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற பக்கத்தான் ஹரப்பான் ஏதாவது அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமா என்பதையும் இந்த இடைத் தேர்தல் காட்டிடும்.

எம்கே ஆதரவாளன்: மலேசிய அரசியலில் எல்லாமே மகாதிர் எப்போது பதவியை மாற்றிக்கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே உள்ளது.

கெராக்கான் ஒரு சின்னஞ்சிறு கட்சிதான். ஆனால், என் வாக்கு அதற்குத்தான்.

பெர்சத்துவுக்கு ஒரு செய்தியை- அதன் தலைவரின் கோமாளித்தனங்களில் மக்கள் வெறுப்படைந்திருப்பதை- உரக்கச் சொல்லிட இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஹனாபியா பூத்தே: பெர்சத்துத் தலைவரின் பிரித்தாளும் கொள்கையால் மலாய்க்காரர்கள்கூட வெறுப்படைந்திருக்கிறார்கள்.

மலேசியா ஒன்றுபட்ட, முற்போக்கான நாடாக விளங்க மலாய்க்காரர்கள் இனவாதப் பேச்சுகளையும் செயல்களையும் கைவிட வேண்டும் .இவை நாட்டில் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கும் வைரஸ்கள்.

ஆய்வாளன்: ஹரப்பான் ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஒரே நன்மை, வாக்களிக்கும் வயதைக் குறைத்ததுதான். அதுவும்கூட எதிரணி ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாயிற்று.

அது தவிர்த்து, வாக்குறுதி அளிக்கப்பட்ட மற்ற சீரமைப்புகள் இதுவரை நடக்கவில்லை.

லவான் அருஸ்: மக்கள் ஹரப்பான் அரசின்மீது ஏமாற்றமடைதிருக்கிறார்கள், ஆத்திரமடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. அதற்காக பிஎன் களவானிகளுக்கே வாக்களிப்பதும் தவறாகும்.

மக்களாகிய நாம் ஜிஇ14-இல் மாற்றத்துக்காக வாக்களித்தோம். மற்றங்கள் இல்லை என்றால் ஜிஇ15-இல் மற்றொரு மாற்றத்துக்கு வாக்களிக்க எந்தத் தடையுமில்லையே.

அதுவரை இருக்கும் நிலை தொடரட்டுமே.

டேவிட் தாஸ்: ஹரப்பானுக்குப் பாடம் கற்பித்துக்கொடுக்க விரும்பி எதிரணிக்கு வாக்களிப்பதும் தவறு.

ஹரப்பான் அரசாங்கத்தின்மீது ஏமாற்றம்கொள்ள காரணங்கள் இருந்தாலும் பல நன்மைகளும் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நியாயவான்: இடைத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை இழப்பதால் குடிமுழுகி விடாது. அது மகாதிருக்கு நல்ல பாடமாக அமையும்.

ஜாகிர் நாய்க் விவகாரத்தை எப்படிச் சுற்றி விட்டார், பார்த்தீர்களா?

தடித்த தோல்: ஜிஇ-14க்குக்குப் பிறகு சீனர்கள், இன, நிற, சமய பாகுபாடு காண்பிக்கப்படாது என்ற வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு உயர்ந்த நம்பிக்கைகளுடன் காத்திருந்தார்கள். ஆனால், மகாதிர் மாறவில்லை என்பதைக் காண்பித்து விட்டார்.

கொசுவைப் போன்ற சின்னஞ்சிறு கட்சியான அவரது பெர்சத்துவுக்கு அமைச்சரவையில் பெரிய இடம் கொடுக்கப்பட்டது. அவர்களும் தாங்கள் பழைய பிஎன் போன்றவர்களே என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகாதிரும் பெர்சத்துவும் ஏமாற்றி விட்டதை எண்ணிச் சீனர்கள் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த இடைத் தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதைப் பார்ப்பது சுவையாக இருக்கும்.