இடைத் தேர்தல்: நஜிப் வருகை கூட்டத்தில் சலசலப்பு

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் இன்று நண்பகல் வரை 43 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் மதிப்பிடுகிறது. கேமரன மலை, ரந்தாவ் இடைத்தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு ஆனால், சண்டாகான் இடைத் தேர்தலைவிட அதிகம்.

பிற்பகலில் மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வாக்களிக்க வருவோருக்கு ஒரு தடையாக அமையலாம்.

தஞ்சோங் பியாயில் உள்ள செர்காட் விவசாய அமைச்சர் சலாஹுடின் ஆயுப்பின் சொந்த ஊராகும். அவர் வாக்களிக்க அங்கு வந்திருந்தார்.

வாக்களித்துவிட்டு வந்த அவரைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது செர்காட்டிலும் தஞ்சோங் பியாய் நகரிலும் வாக்காளர்களின் ஆதரவு ஹரப்பானுக்குத்தான் என்றார்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பார்த்ததைவிட இப்போது பெரிய மாற்றத்தைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

“சிலர் கட்டிப் பிடித்தார்கள், (கன்னத்தில்) முத்தமிட்டார்கள், கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்கள். பெரிய மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது”, என்றாரவர்.

பெக்கான் நனாஸ்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பொந்தியான் எம்பி அஹமட் மஸ்லானும் திடீரென்று வருகை தந்ததைத் தொடர்ந்து கூட்டத்தில் சிறு சலசலப்பு.

ஒரு புறம் பிஎன் ஆதரவாளர்கள் “Malu apa bossku” (போஸ், வெட்கப்பட என்ன இருக்கிறது ) என்று முழக்கமிட்டனர். இன்னொரு புறம் ஹரப்பான் ஆதரவாளர்கள் “pencuri” (திருடா) என்று கூச்சலிட்டனர்.

நஜிப், கூட்டத்தினரிடையே நீண்ட நேரம் இருக்கவில்லை. ஆதரவாளர்களுடன் அருகில் இருந்த உணவகத்துக்குள் நுழைந்தார்.

பிஎன்னுக்கு ஆதரவு தேட வந்தீர்களா என்று வினவியதற்கு பிஎன் ஆதரவாளர்களைச் சந்திக்க வந்ததாகச் சொன்னார்.

“இப்போது போய் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியுமா? சும்மா, தேர்தல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன்”, என்றார்.

15நிமிடங்கள் இருந்துவிட்டு கிளம்பி விட்டார் நஜிப்.