தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீன வாக்காளர்கள் ஹரப்பானைக் கைவிட்டார்கள்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்துள்ள ஒன்பதாவது தேர்தலாகும். அதேவேளை, கேமரன் மலை, செமிஞ்யி, ரந்தாவுக்குப் பின்னர் ஹரப்பான் தோல்விகண்ட நான்காவது தேர்தலும் அதுதான்.

இதற்குமுன் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் பிஎன்னுக்கு மலாய் ஆதரவு கணிசமான அளவுக்கு அதிகரித்து வந்ததைக் காண முடிந்தது. தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் ஒரு மாற்றம் சீனர்களின் வாக்குகளும் பிஎன்னுக்கு ஆதரவாக திரும்பியுள்ளன.

அவை பெரும்பாலும்   ஆட்சேப  வாக்குகள்  என்பதில்   ஐயமில்லை. மலாய்க்காரர்கள் பெரும்பகுதியாக உள்ள வாக்களிப்பு வட்டங்களைவிட சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள வட்டங்களில் ஹரப்பான் ஆதரவு பெருமளவு குறைந்துள்ளது.

அதன் விளைவாக, தஞ்சோங் பியாய் தொகுதியில் உள்ள 27 வாக்களிப்பு வட்டாரங்களிலும் அது தோல்வியைத் தழுவியது. கடந்த பொதுத் தேர்தல்களில் 11-இல் ஹரப்பான் வெற்றி பெற்றிருந்தது.

கேமரன் மலை, செமிஞ்யி இடைத் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் ஹரப்பான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. பிஎன்னின் கோட்டை என்று கருதப்பட்ட ரந்தாவில்கூட நகர்ப்புறத்தில் ஒரு வாக்களிப்பு வட்டத்தில் அதனால் வெற்றி பெற முடிந்தது.

தஞ்சோங் பியாய்-இல் 80 விழுக்காடு மலாய் மக்களைக் கொண்ட பகுதிகளில் ஹரப்பானுக்கான ஆதரவு 2-இலிருந்து 12 விழுக்காடுவரை சரிந்திருந்தது.

அதனுடன் ஒப்பிட்டால், சீனர்கள் 80 விழுக்காட்டுக்குமேல் உள்ள பகுதிகளில் ஹரப்பான் ஆதரவு 27-இலிருந்து 38 விழுக்காடுவரை சரிவு கண்டுள்ளது.