தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என மகாதிர் முகம்மட் கூறினார்.
ஆனால், அது படுதோல்வியாக அமையும் என்பது அவர் எதிர்பார்க்காத ஒன்று.
“தஞ்சோங் பியாய் மக்களின் முடிவை ஏற்கிறேன். எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.
“2,000 வாக்குகளில் வெற்றிபெறக் கூடும் என்று எதிர்பார்த்தேன்.
“ஆனால், தேர்தல் முடிவு 15,086 வாக்குகள் வேறுபாட்டைக் காட்டியது”, எனப் பிரதமர் மகாதிர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
என்ன தவறு என்பதை கூட்டணிக் கட்சிகள் “விரிவாகவும், ஆழமாகவும், நேர்மையாகவும்” அலசி ஆராயும் என்றாரவர்.
சனிக்கிழமை தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருந் தோல்வியைச் சந்தித்தது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 26.4 விழுக்காடுதான் ஹரப்பானுக்குக் கிடைத்தது. பிஎன் 65.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அது பெற்ற வாக்குகளைவிட இது 19.5 விழுக்காடு அதிகமாகும்.
சீன, மலாய் வாக்குகள் பெருமளவில் ஹரப்பானுக்குக் கிடைக்கவில்லை என்பதை மலேசியாகினி கணிப்பு காட்டுகிறது.