பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அசுமா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பால் யோங்கை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பிரபல வழக்குரைஞர் ஹனிப் காத்ரி அப்துல்லா வலியுறுத்தினார்.
“ ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி குறித்து மந்திரி புசார் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்கிறபோது பணிக்குத் திரும்புவதாக தானே அறிவித்துக்கொள்ளும் பால் யோங் ஒரு சுயநலமி, பொறுப்பற்றவர், முரடர்.
“அவரை அஹமட் பைசல் உடனே தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய வேண்டும்”, என்று ஹனிப் ஓர் அறிக்கையில் கூறினார்.
தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் ஹரப்பான் அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதன் பணியைப் பொறுப்புடன் ஆற்றிட வேண்டும் என்பதைத் திடமாக உணர்த்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
25-வயது வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யோங், விசாரணை முடியும்வரை விடுப்பில் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டு விடுப்பில் இருந்து வந்தார். அவர் அஹமட் பைசலுடன் கலந்து பேசிய பின்னர் மீண்டும் வேலைத் திரும்புவதாக நாவம்பர் 15-இல் தானாகவே அறிவித்தார்.
யோங், வீடமைப்பு, ஊராட்சி, பொதுப் போக்குவரத்து, முஸ்லிம்-அல்லாதார் விவகாரம் மற்றும் புதுக் கிராமங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினராவார்.
நேற்று ஒலிப்பதிவு ஒன்றில் டிஏபி மூத்த தலைவர் ஒருவர் என்று கூறப்பட்ட ஒருவர் வேலைக்குத் திரும்பும் யோங்கின் முடி வைக் கடுமையாகச் சாடினார்.
யோங் பணிக்குத் திரும்புவதாக அறிவிக்குமுன்னர் கட்சியின் முன்அனுமதியைப் பெறவில்லை என்றவர் கூறிக்கொண்டார்.
“அணிவது டிஏபி சீருடை , வாங்குவது டிஏபி-இன் சம்பளம். ஆனால், தன்னைப் பெரிய மனிதராக நினைத்துக்கொள்வார்கள். பணிக்குத் திரும்புவதைச் சொந்தமாக அறிவித்துக் கொள்வார்கள்.
“கட்சிசியைக் கேட்க மாட்டார்கள். கட்சியிடம் தெரிவிக்க மாட்டார்கள். நான் பெயரைக் குறிப்ப்பிட விரும்பவில்லை. ஆனால் எல்லாருக்கும் தெரியும்”, என்று அந்த ஒலிப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, சமூக ஆர்வலர் சுதாகரன் ஸ்டேன்லி யோங் மீண்டும் பணிக்குத் திரும்பியது “அதிர்ச்சியளிப்பதாக”க் கூறினார்.
“பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் தொடர்ந்து எக்ஸ்கோ பதவி வகிப்பதை ஏற்பதற்கில்லை”, என்று சி4 பினாங்கு ஒருங்கிணைப்பாளருமான ஸ்டேன்லி கூறினார்.