முன்னாள் பாதுகாப்புச் சட்ட (சோஸ்மா) கைதியான யாஸிட் சுவாட்டின் வழக்குரைஞர்கள், யாஸிட்டையும் தமிழீழ விடுதலைப் புலி(எல்டிடிஇ) ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமல்ல என்கிறார்கள்.
அல் கைடா மற்றும் ஐசிஐஎஸ் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாஸிட் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாஸிட் விவகாரம் தொடர்பில் நிலவும் “தப்பெண்ணங்களை”க் களைய விரும்புவதாக அவரின் வழக்குரைஞர்கள் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தனர். யாஸிட் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதக் குற்றங்கள் “நிரூபிக்கப்படவில்லை” என்பதை அவர்கள் அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தினர்.
யாஸிட்டுக்கு “ 2001-இல் அமெரிக்காவில் அல்-கைடா நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்பிருப்பதாகக் கூறி” அவர் இப்போது இரத்துச் செய்யப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ)த்தின்கீழ் எட்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
“அக்குற்றச்சாட்டு எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை”, என அவரின் வழக்குரைஞர்கள் அமிர் ஹம்சா அர்ஷாட் , நியு சின் இயு, மற்றும் ஜோசுவா டே ஆகியோர் கூறினர்.
பிறகு யாஸிட் பயங்கரவாத சித்தாந்தங்களைப் பரப்பி பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் திரட்டினார் என்று குற்றஞ்சாட்டி சோஸ்மாவின்கீழ்க் கைது செய்தனர். அக்குற்றச்சாட்டைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் பின்னர் கைவிட்டது.
அதன்பின்னர், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. யாஸிட் அக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு சிறை சென்றார்.
தண்டனை முடிந்து வெளிவந்ததும் “தெளிவற்ற குற்றச்சாட்டு” சுமத்தப்பட்டு 2012 பயங்கரவாதத் தடுப்புச் சட்ட(பொடா)த்தின்கீழ் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார். கடந்த புதன்கிழமைவரை அவர் காவலில் இருந்தார்.
பொடாவும் சோஸ்மாவும் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கு யாஸிட் விவகாரம் நல்லதொரு சான்று.
“யாஸிட் ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்று கேள்வி கேட்பது அவருக்கு இழைக்கப்படும் அநியாயமாகும்”, என்றவர்கள் சொன்னார்கள்.
சோஸ்மா, பொடா போன்று விசாரணையின்றிக் காவலில் வைப்பதற்கு வகை செய்யும் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அச்சட்டங்களின்கீழ் தடுத்து வைக்கப்படும் அத்தனை பேருக்காவும் சேர்த்தே குரல் கொடுக்க வேண்டும் என்று அமிர், நியு, டே ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.