வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் பங்கேற்பது குறைவாக இருப்பதற்கு அவர்களை வேலைக்கு வைத்துள்ள முதலாளிமார் மிரட்டலே முக்கிய காரணம் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக ஃபிரி மலேசியா டுடே செய்தி ஒன்று கூறியது.
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 2.2 மில்லியன் அந்நிய தொழிலாளர்களில் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையினர் அதாவது 50 ஆயிரத்துக்கும் சற்றே அதிகமானவர்கள்தான் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்களாம். எம்டியுசி தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.
இதில், பதிவு செய்யப்படாதிருக்கும் சுமார் நான்கு மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை.
நேற்று அந்நிய தொழிலாளர்களும் தொழிற்சங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய சாலமன், அந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர்வதற்கு முதலாளிமார்கள் தடையாக உள்ளனர் என்றார். தொழிற்சங்கங்களில் சேர்ந்தால் வேலை பறிபோகும், சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்..
சில முதலாளிகள் தொழிலாளர்களின் கடப்பிதழ்களைத் தங்கள்வசமே வைத்துக்கொள்கிறார்கள். இது 1966 கடப்பிதழ்ச் சட்டப்படி தப்பு.
ஆனால், சட்ட அமலாக்கம் சரியாக இல்லை என்பதால் இது நடக்கிறது என்று சாலமன் கூறினார்.
அமலாக்கம் சரியாக இல்லை என்ற நிலையில் புதிது புதிதாக சட்டங்கள் கொண்டுவருவதில் பயனில்லை.
“சட்டம் அந்நிய தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேரலாம் என்கிறது. சில முதலாளிகள் சேராதே என்று த்டைப்போடுகிறார்கள். அரசாங்கத்துக்கும் இது தெரியும்”, என்று சாலமன் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.