அரசாங்கப் பதவிக்கு வருமுன்னரே ஜாஹிட் பணக்காரர்தான் – அனுவார் மூசா

அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி பல ஆடம்பர கார்கள் வைத்திருப்பதை ஒரு விவகாரமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஜாஹிட் வசமுள்ள பல கார்களும் பெரிய மோட்டார் சைக்கிள்களும்   அவருக்குக்   கிடைத்த   அன்பளிப்புகள் என்றாரவர்.

ஜாஹிட் அரசாங்கப் பதவிக்கு வருமுன்னர் பல ஆண்டுகள் நிறுவன(கார்ப்பராட்)த் துறையில் பெரிய பதவியில் இருந்தவர் என்று அந்த கெர்தே எம்பி கூறினார்.

“அவரின் பல கார்களும் பெரிய மோட்டார் சைக்கிள்களும் சுல்தான் ஒருவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டவை என்பதை நானறிவேன்.

“இப்போது இப்பிரச்னையை எழுப்புவானேன்?

“அரசாங்கத்தில் பதவியேற்பதற்குமுன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத் துறையில் உயர்பதவி வகித்த அவர் அப்போதே கோடீஸவரர்தானே?”, என்றாரவர்.

ஜாஹிட்டின் ஆடம்பர கார்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ள இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்-கின் அரசியல் செயலாளர் ஷியாரெட்ஷா ஜொஹானுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அனுவார் டிவிட்டரில் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.