அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தும்படி அவரின் உதவியாளரான முகம்மட் யூசுப் ராவுத்தரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்கிறார் யூசுப்பின் உறவினர் ஒருவர்.
அன்வார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று யூசுப் சத்திய பிரமாணம் செய்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது மொகைதின் அப்துல் காதர் அவ்வாறு கூறினார்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக யூசுப் அவரின் தாத்தா காலஞ்சென்ற எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ் உள்பட குடும்பத்தார் எவரிடமும் சொன்னதில்லை என்றாரவர்.
“ஆண்டுத் தொடக்கத்தில் அவரின் தாத்தா காலமானதை அடுத்து யூசுப் அவரின் குடும்பத்தைவிட்டு விலகியே இருக்கிறார்.
“அவர் குறிப்பிடும் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு ஆவதையும் பிகேஆர் காங்கிரஸ் தொடங்குவதற்கு இரண்டு நாளுக்கு முன்னதாக அவ்விவகாரம் மீண்டும் எழுப்பப்படுவதையும் பார்க்கையில் யாரோ சில அரசியல்வாதிகள் அவர்களின் சுயநலத்துக்காக இவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
“புதிய மலேசியாவில் பழைய குதப்புணர்ச்சி அரசியல் மூட்டைக்கட்டி அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அது மீண்டும் மீண்டும் தலைநீட்டிக் கொண்டே இருக்கிறது. மலேசியர்கள் இப்படிப்பட்ட சாக்கடை அரசியலைப் புறக்கணிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”, என மொகைதின் ஓர் அறிக்கையில் கூறினார்.