’நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான் பிகேஆர் இளைஞர்கள் மோதல்’- அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று பிகேஆர் இளைஞர்களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புக்கு தன்னுடைய “மன்னிக்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் போக்குமே” காரணம் என்கிறார்.

“நான் விட்டுக்கொடுப்பவன், மன்னிக்கும் குணமுள்ளவன் அதன் விளைவாக சில நேரங்களில் நேற்று நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”, என்றவர் சொன்னார்.

மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

“நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் இப்படி நடந்துகொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களில் பெரும்பாலோரை நீக்கியிருக்க வேண்டும்”, என்றாரவர்.

நேற்று பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தில் இரண்டு பிரிவினருக்கிடையில் நிகழ்ந்த கைகலப்புப் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

சண்டை இட்டுக் கொண்டாலும் இரு தரப்பினருக்கும் கட்சிமீது விசுவாசம் குறையவில்லை என்று கூறியவர்,  இரு தரப்புத் தலைவர்களும் இன்று பீகேஆர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொன்ண்டதைச் சுட்டிக்காட்டினார்.