கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அதற்கும் தயார் என்று கூறிய பிகேஆர் உதவித் தலைவர் சுரைடாவை கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் சாடினார்.
நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது சுரைடா அவ்வாறு கூறியது “தவற்றை ஒப்புக்கொள்வது போன்றது” என்று சைபுடின் குறிப்பிட்டார்.
“கட்சியின் ஒழுங்கு விதிகளைத் தெரிந்தே மீறியவர்கள்தான் அப்படியெல்லாம் பேசுவார்கள்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு அஸ்மின் அலி ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தலைநகரில் ஒரு தங்குவிடுதியில் ஒன்று கூடினர்.
சுமார் 2,000 பேர் கூடியிருந்த அந்நிகழ்வில் சுரைடா உரையாற்றினார், அங்கு உரை நிகழ்த்திய இன்னொருவர் கட்சி உதவித் தலைவர்களில் ஒருவரான தியான் சுவா.
அஸ்மின் அணியில் உள்ளவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சைபுடினை வினவியதற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அமைதியையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
“பேச்சுவார்த்தைகள் மூலமாக இணக்கம் காண அவர் தயாரக இருக்கிறார்”, என்றார்.